தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , ‘ஃபைவ் ஸ்டார் ‘ கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவுள்ள நிலையில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான முன்னோட்டத்தில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம் பிடித்திருப்பதாலும் பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.