உஸ்பெகிஸ்தானின் தஷ்கென்ட் பனியோத்கார் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய இலங்கை அணி தனது 3 போட்டிகளிலும் 20 கோல்களைத் தாரை வார்த்து தோல்விகளுடனும் வெறுங்கையுடனும் நாடு திரும்பவுள்ளது.
உஸபெகிஸ்தானிடம் 0 – 10 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் நேபாளத்திடம் 0 – 8 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் படுதோல்விகளை சந்தித்த இலங்கை, சனிக்கிழமை நடைபெற்ற தனது கடைசிப் போட்டியில் லாஓஸிடம் 0 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தத்தமது முதலிரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கையும் லாஒஸும் ஆறுதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் தத்தமது கடைசிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடின.
அப் போட்டியில் லாஓஸ் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
உஸ்பெகிஸ்தான், நேபாளம் ஆகிவற்றுடனான போட்டிகளில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியினர் லாஓஸுடனான போட்டியில் ஓரளவு திறமையாக விளையாடினர்.
இந்த சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக இலங்கைக்கு இரண்டு கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், வீராங்கனைகளுக்கு போதிய அனுபவமின்மை காரணமாக அவை தவறவிடப்பட்டது.
போட்டியின் 27ஆவது நிமிடத்தில் இமேஷா வர்ணகுலசூரியவுக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது முயற்சியில் போதிய பலம் இல்லாததால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.
மறு பக்கத்தில் லாஓஸ் இரண்டு வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது.
இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் ப்ரவீனா பெரேராவுக்கு கிடைத்த கோல் போடும் வாய்ப்பும் நழுவிப் போனது.
போட்டியின் 72ஆவது நிமிடத்தில் லாஓஸ் வீராங்கனை சைக்ஹாம் வலப்புறத்திலிருந்து ஓங்கி உதைத்த பந்தை இலங்கை கோல்காப்பாளர் அஷானி அநுராதினி தனது கோலுக்குள்ளேயே தள்ளி இனாம் கோல் ஒன்றை லாஓஸுக்கு கொடுத்தார்.
உபாதையீடு நேரத்தில் சுமார் 25 யார் தூரத்திலிருநது சய்சாமோன் இன்தாஃபோன் பலமாக உதைத்த பந்து கோலினுள் புகுந்தது. இதற்கு அமைய லாஓஸ் 2 – 0 என வெற்றிபெற்றது.
இலங்கையின் முதல் பதினொருவர் அணியில் யாழ். வீராங்கனைகளான சிவனேஸ்வரன் தர்மிகா (இல. 18), சுரேந்திரன் கௌரி (இல. 14), மலையக வீராங்கனை செல்வராஜ் யுவராணி (இல. 19) ஆகியோர் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த மூவரும் இங்;குள்ள படத்தில் பின்வiரிசையில் காணப்படுகின்றனர்.
மற்றொரு யாழ். வீராங்கனை பாஸ்கரன் ஷானு (இல. 9) மாற்று வீராங்கனையாக அணியில் இடம்பெற்றார்.