பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் பிரகாரம் 245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடுகிறது.
அணித் தலைவருக்கே உரித்தான பாணியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க அபார சதம் குவித்து இலங்கையை நல்ல நிலையில் இட்டார்.
123 பந்துகளை எதிர்கொண்ட சரித் அசலன்க 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களைப் பெற்றதுடன் இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களிலும் பங்காற்றினார்.
74ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சரித் அசலன்க தனது 5ஆவது சதத்தைக் குவித்தார்.
இதில் நான்கு சதங்கள் ஆர். பிரேமதாச அரங்கில் பெற்றவையாகும். இதன் மூலம் இந்த மைதானத்தில் இலங்கை சார்பாக 4 சதங்கள் குவித்த சனத் ஜயசூரியவின் சாதனையை சரித் அசலன்க சமப்படுத்தினார்.
இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்தளவு சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க ஆகிய இருவரும் மோசமான அடி தெரிவுகளால் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.
போட்டியின் நான்காவது ஓவரில் தன்ஸிம் ஹசன் வீசிய முதல் பந்தில் விக்கெட் காப்பாளர் லிட்டன் தாஸிடம் பிடிகொடுத்து பெத்தும் நிஸ்ஸன்க ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (5 – 1 விக்.)
தொடர்ந்து 5ஆவது ஓவரில் தஸ்கின் அஹ்மத் வீசிய பந்தை மிக சோர்வாக அடித்த நிஷான் மதுஷ்க (6) போல்ட் முறையில் களம் விட்டகன்றார். (11 – 2 விக்.)
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் 4 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு கவனக்குறைவான அடி தெரிவினால் ஓட்டம் பெறாத நிலையில் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் எதிரணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். (29 – 3 விக்.)
தொடர்ந்து குசல் மெண்டிஸ், அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்கள் பகிர்ந்த நிலையில் தன்வீர் இஸ்லாம் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.
43 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிள், ஒரு சிக்ஸுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே (29) அவசரப்பட்டு சிக்ஸ் அடிக்க விளைந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
சரித் அசலன்கவுடன் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களை ஜனித் லியனகே பகிர்ந்தார்.
அவர் ஆட்டம் இழந்து 2.2 ஓவர்கள் கழித்து புதிய விதிப்படி 35ஆவது ஓவரில் இருந்து ஒரு பந்தைப் பயன்படுத்தும் முறை அமுலுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கையின் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன் கடைசி 4 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
அறிமுக வீரர் மிலான் ரத்நாயக்க சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது துடுப்பின் உள் விளிம்பில் பந்து பட்டு விக்கெட்டைப் பதம் பார்க்க துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். (192 – 6 விக்.)
சரித் அசலன்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை மிலான் ரத்நாயக்க பகிர்ந்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த காலி றிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் சக வீரர்களான சரித் அசலன்கவும் வனிந்து ஹசரங்கவும் ஓட்டவேகத்தை அதிகரிக்க முயன்றனர்.
அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மஹீஷ் தீக்ஷன மிக மோசமான அடி மூலம் ஒரு ஓட்டத்துடன் நடையைக் கட்டினார்.
சரித் அசலன்க சதம் குவித்த சொற்ப நேரத்தில் கடைசி ஓவரில் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயன்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.
ஏஷான் மாலிங்க கடைசி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அசித்த பெர்னாண்டோ ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் தஸ்கின் அஹமத் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.