மார்கன் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன்
நடிகர்கள்: விஜய் அண்டனி, அஜய் திஷான், சமுத்திரக்கனி , பிரிகிடா , தீப்ஷிகா, ‘மகாநதி’சங்கர், கனிமொழி மற்றும் பலர்.
இயக்கம் : லியோ ஜோன் பால்
மதிப்பீடு : 2.5/5
விஜய் அண்டனியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தனி ரகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் அவருடைய நடிப்பில் வெளியாகும் க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் என்றால் கூடுதல் கவனம் பெறும். அந்த வகையில் கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த ‘மார்கன் ‘ திரைப்படம் ரசிகர்களின் ஆவலை உச்சக்கட்ட காட்சி வரை தக்க வைத்ததா? இல்லையா ? என்பது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
சென்னையில் இளம்பெண் ஒருவர் விட ஊசி செலுத்தப்பட்டு, உடல் முழுவதும் கருமையான வண்ணத்தில் மாறும் வகையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்குகிறது. இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாக… மும்பையில் வினோதமான காரணத்தினால் உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு.. பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு ஓய்வில் இருக்கும் காவல்துறையின் உயர் அதிகாரியான துருவ் ( விஜய் அண்டனி) என்பவரின் கவனத்திற்கு வருகிறது.
அந்த காவல்துறை அதிகாரி இதே பாணியிலான கொலை வழக்கை எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்காகவும், அந்த வழக்கின் காரணமாக சொந்த இழப்புக்களுக்கு ஆளாகி இருப்பதாலும் கொலையாளியை கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகமாகி , சென்னைக்கு வருகிறார். இங்கு இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அவருடைய நண்பரான காவல்துறையின் உயர் அதிகாரியான முத்துவேல் ராஜனிடம் ( சமுத்திரக்கனி) இருந்து பெறுகிறார்.
இவருக்கு காவல்துறையில் பணியாற்றும் பிரிகிடா,’ மகாநதி’ சங்கர் ஆகியோர் உதவுகிறார்கள். விசாரணையின் போது தமிழறிவு( அஜய் திஷான்) என்ற இளைஞன் மீது சந்தேகம் எழுகிறது. அவரை விசாரிக்கும் போது அவரிடம் இருக்கும் அபூர்வ ஆற்றல் தெரிய வருகிறது.
அந்த அபூர்வமான ஆற்றலை பயன்படுத்தி இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டறிய காவல்துறை அதிகாரியான துருவ் முயற்சிக்கிறார். அவருடைய முயற்சியில் வெற்றி கிடைத்ததா ? இல்லையா? என்பதும், இந்தக் கொலையை யார் செய்கிறார்கள்? என்பதும், அதற்கான பின்னணி என்ன? என்பதை விவரிப்பதும் தான் இப்படத்தின் கதை.
ஃபேண்டஸியுடன் கூடிய பரபரப்பான திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும்.. அடுத்து என்ன நடக்கும்? என்ற விடயம் குறித்து பதற்றத்தை எமக்குள் ஏற்படுத்தி… நகத்தை கடித்துக் கொண்டு…. ஆர்வத்துடன் இருக்கையின் நுனியில் அமர வைத்ததா..!? என்றால் இல்லை என்று சொல்லலாம்.
இதுபோன்ற கதைக்கு பிளாஷ்பேக் உத்தி கை கொடுக்கும் என்றாலும்… கதையில் இரண்டு நாயக பிம்பங்கள் இருப்பதால்.. எதனை பின் தொடர்வது என்ற குழப்பம் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுகிறது.
நீச்சல் வீரர் தமிழறிவு எனும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகும் நடிகர் அஜய் திஷான் – தொடக்கத்தில் தடுமாறினாலும்… காட்சிகள் நகர நகர இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கிறார்.
காவல்துறை அதிகாரி துருவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் அண்டனி முகத்தில் கருப்பு வண்ணத்தை பூசிக்கொண்டு அசால்டாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெறுகிறார்.
தோற்ற பொலிவு குறித்த பெண்களின் மூடநம்பிக்கையை மையப்படுத்திய இப்படத்தின் மூலக் கதையை நேர்த்தியாக சொல்லியிருந்தாலும் … ‘தாராவி தார்’ போன்ற சொல்லாடல்களை தவிர்த்து இருக்கலாம். ஏனெனில் இதுவும் ஒரு வகையினதான உருவ கேலியே.
இரண்டாம் பாதியில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் விறுவிறுப்பும்.. உச்சகட்ட காட்சியில் அடுத்து அடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தரும் சுவராசியமும் முதல் பாதியில் இல்லாதது குறைதான்.
விஜய் அண்டனி, அஜய் திஷான் ஆகிய இருவரையும் கடந்து வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கனிமொழியின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
தமிழறிவு கதாபாத்திரத்திற்கு பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் இருந்து அபூர்வமான ஆற்றல் கிடைப்பதன் பின்னணி… சுவராசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அது புதிதாகவும் அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் ரசிகர்களுக்கு படத்துடன் பயணிக்க பக்கபலமாக உதவுகிறது.
மார்கன் – நுட்பமானவன்.