இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பூரண அனுமதியுடன் கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள எட்டு பிரபல அணிகளுக்கு இடையிலான ஐ லீக் கால்பந்தாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெருவிருந்து கிடைத்துவருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமான ஐ லீக் காலப்ந்தாட்டத்தில் முதல் நான்கு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பை தோற்றுவித்தன. சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் பிரதான கழங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டம் முதல் தடவையாக நடைபெறுகின்றது. எனினும் கால்பந்தாட்ட விளையாட்டும் ஆற்றல்களும் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றது என்பதை வீரர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தற்போது இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெற்று வருவதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) இரண்டு தீர்மானம் மிக்க போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிரபல விளையாட்டுக் கழகங்களான ஜாவா லேன் கழகத்துக்கும் றினோன் கழகத்துக்கும் இடையிலான பி குழு போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் கட்டப் போட்டியில் மொரகஸ்முல்லை கழகத்தை 4 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஜாவா லேன் கழகம் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கு முன்னேறுவதுடன் றினோன் கழகத்தின் இறுதிச் சுற்று வாய்ப்பு பறிபோகும்.
இன்றைய போட்டியில் றினோன் கழகம் வெற்றிபெற்றால் இரண்டு அணிகளினதும் அரை இறுதி வாய்ப்பு மூன்றாம் கட்டப் போட்டி முடிவுகளின் பின்னரே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை, ஏ குழுவுக்கான முதலாம் கட்டப் போட்டியில் புளூ ஸ்டார் கழகத்தை அதிரவைத்த நியூ ஸ்டார் கழகம் இன்று தனது இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து மாளிகாவத்தை யூத் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.
இந்தப் போட்டியில் நியூ ஸ்டார் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். மாளிகாவத்தை யூத் வெற்றிபெற்றால் மூன்றாம் கட்டப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே ஏ குழுவிலிருந்து அரை இறுதிக்கு செல்லும் இரண்டாவது அணி தீர்மானிக்கப்படும்.
அரை இறுதிக்கு இரண்டு அணிகள் தகுதி
சனிக்கிழமை (28) நடைபெற்ற இரண்டு ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் தத்தமது இரண்டாவது வெற்றிகளை ஈட்டிய ரெட் ஸ்டார் கழகமும் (பி குழு) சோண்டர்ஸ் கழகமும் (ஏ குழு) அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

மொரகஸ்முல்லை கழகத்துக்கு எதிரான போட்டியின் 20ஆவது நிமிடத்தில் இனாம் கோல் (own goal) ஒன்றை தாரைவார்த்த ரெட் ஸ்டார் கழகம், இடைவேளைக்குப் பின்னர 7 நிமிட இடைவேளையில் இரண்டு கோல்களைப் போட்டு 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
ரெட் ஸ்டார் வீரர் எம்.ஜே. இலாமி சொந்த கோல் ஒன்றை மொரகஸ்முல்லைக்கு போட்டுக்கொடுத்தார். இதனால் உற்சாகம் அடைந்த மொரகஸ்முல்லை கழக வீரர்கள் கோல் நிலையை அதிகரிக்க கடுமையாக முயற்சித்தனர்.
இடைவேளையின் பின்னர் 60ஆவது நிமிடத்தில் டி.சி. டில்ஷானும் 67ஆவது நிமிடத்தில் எம்.எவ். பஸ்லுல்லாவும் கோல்களைப் போட்டு ரெட் ஸ்டார் அணியை வெற்றிபெறச் செய்தனர்.
நிரேஷ் சுந்தரராஜ் 3 கோல்கள்
தொடர்ந்து நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டியில் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட சோண்டர்ஸ் கழகம் கடைசி 18 நிமிடங்களில் 3 கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய புளூ ஸ்டார் கழகம் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் எஸ். சந்தேஷ் போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது. தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க புளூ ஸ்டார் கழகம் கடுமையாக முயற்சித்தது.
ஆனால், அதன் முயற்சிகள் பலன் தரவில்லை.
போட்டியின் 70ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் பெனல்டி எல்லையில் வீரர் ஒருவர் முரணான வகையில் விளையாடியதால் சோண்டர்ஸ் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
நிரேஷ் சுந்தரராஜ் உதைத்த பெனல்டியை புளூ ஸ்டார் கோல்காப்பாளர் தடுத்தபோது பந்து முன்னோக்கி வந்தது. அப்போது வேகமாக செயல்பட்ட நிரேஷ் சுந்தரராஜ் பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
தொடர்ந்து 82ஆவது நிமிடத்திலும் உபாதையீடு நேரத்திலும் நிரேஷ் சுந்தரராஜ் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு சொண்டர்ஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார்.