ஒரு திரைப்படத்தை பட மாளிகைக்கு வருகை தந்து பார்க்க வைக்க தூண்டும் வகையில் படத்தில் இடம்பெற்ற சிறிய அளவிலான காட்சிகளை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் நடிகர் ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்து ஜூன் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கட்ஸ் ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த தசாப்தங்களில் எம்முடைய முன்னோர்கள் பாறையாக கிடந்த தரிசு பூமியை செதுக்கி, சீர்படுத்தி, விவசாய நிலமாக மாற்றி உள்ளனர் என்பது தொடர்பான உரையாடலும், அதற்கான தற்கால அவசியம் குறித்தும் விவரிக்கும் வகையிலான காட்சிகள்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், நான்சி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், சுருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். விவசாயத்தை பற்றியும் , விவசாயிகளைப் பற்றியும் உணர்வுபூர்வமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.
இன்றும் இந்திய கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தும் கிராம சபை கூட்டத்தின் பின்னணியில் விவசாயம் குறித்த பிரச்சனைகளை விவாதிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது தனித்துவமான கவனத்தை கவர்கிறது.