தயாரிப்பு : ஐகான் சினி கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : சேது, சம்ரிதி தாரா, பி எல் தேனப்பன், சுப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர்.
இயக்கம் : APG ஏழுமலை
மதிப்பீடு : 2.5/5
‘மைனா’ படத்தில் காவல் அதிகாரியாக நடித்து, ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சேது. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மையல்’. மாறுபட்ட கதை களத்தில் உணர்வுபூர்வமான காதலை சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆடுகளை களவாடும் மாடசாமி ( சேது) ஒருமுறை ஆடுகளை களவாடி கொண்டு திரும்பும் போது, பொது மக்களின் தர்ம அடியிலிருந்து தப்பிப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கிணற்றில் குதிக்கிறார். அந்தப் பகுதியில் வாழும் மந்திரவாதியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான அல்லி ( சம்ரிதி தாரா) கிணற்றில் குதித்த மாடசாமியை காப்பாற்றி, அவருக்கு வைத்தியம் செய்கிறார்.
அவர் அங்கு தங்கி இருக்கும் சில தினங்களில் அல்லி காட்டிய அன்பால் அவளை திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார். அத்துடன் ஊருக்குச் சென்று திருமணத்திற்கான நகை- புடவை- தாலி- பணத்துடன் திரும்ப வருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதே தருணத்தில் அந்த ஊரில் ஒரு குற்ற சம்பவம் நடைபெறுகிறது.
அதற்கான காவல்துறையின் விசாரணையில் மாடசாமி குற்றவாளியாக்கப்படுகிறார். அதன் பிறகு அவருடைய காதல் திருமணம் நடைபெற்றதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கிராமிய பின்னணியிலான படைப்புகளை உருவாக்குகிறோம் என்று சில படைப்பாளிகள் – நகரம் சார்ந்த கதை மாந்தர்களை மையப்படுத்தி கதையை விவரிப்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் அசலான கிராமத்து மனிதர்களை கதை மாந்தர்களாக கொண்டிருக்கிறது. இதற்காகவே எழுத்தாளர் ஜெயமோகனையும், இதனை இயக்கிய இயக்குநர் ஏழுமலையையும் பாராட்டலாம்.
ஆனால் இவர்களின் கூட்டு முயற்சி பலன் அளித்ததா? என்றால் வீரியமாகவும் , அடர்த்தியாகவும் விவரிக்கப்பட்ட. பாரிய வெற்றியை பெற வேண்டிய படைப்பை சில வணிக அம்சங்களுக்காக சமரசம் செய்து கொண்டு, படைப்பினை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை.
மந்திரவாதி குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணிற்கும், ஆடுகளை களவாடும் திருடனுக்கும் இடையேயான காதல் என்ற கதை சுருக்கம் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இதற்காக இடம்பெற்ற கிளை கதையில் சுவாரசியம் இல்லாததால்.. இந்த யதார்த்தமான காதல் கதை வழக்கமான சினிமா காதலாக மாறுகிறது.
மந்திரவாதி குடும்பத்தை சேர்ந்த அல்லி தன் காதலனுக்காக உயர்ந்த மலை மீது அமர்ந்து கொண்டு பட்டாம்பூச்சியை வரவழைப்பது காதலர்கள் விரும்பும் ‘ஜில்’லான காட்சி.
அதேபோல் ‘என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச..’ எனும் பாடல் மனதில் ரீங்காரமிடுகிறது. அறிமுக இசையமைப்பாளர் அமர் கீத் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணியிசையிலும் தான் இசையின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார். ஒளிப்பதிவு , படத்தொகுப்பு இவை இரண்டும் பல இடங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
மாடசாமியாக நடித்திருக்கும் சேது தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை விட தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை சம்ரிதி தாரா – அழகு + இளமையுடன் கிராமத்து உடையில் தோன்றி ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.
மையல் – தையல்