பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. அந்த சட்டம் கிழித்தெறியப்பட வேண்டியதொன்றாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
வடக்கில் காணி சுவீகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (20) பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் மக்களின் காணிகளை சுவீகரித்துக்கொண்டு அவற்றை ஐக்கிய இராச்சியத்தின் மகா ராணியின் கீழ் கொண்டுவருவதற்காக செய்யப்பட்ட சட்டம் இப்போது நாட்டின் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக பயன்படுத்துவதை நாங்கள் முழுமையாக கண்டிக்கின்றோம்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட காணிகளை அபிவிருத்திகளுக்காக பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின் அங்கே அரச காணிகள் இருக்கின்றன. ஆனால் அந்த அரச காணிகளில் வேறு எவராவது இருப்பார்களாக இருந்தால் அரச காணி கையகப்படுத்தல் நடவடிக்கை சட்டம் இருக்கிறது. அதன்படி அவர்களை 3 மாதங்களில் அகற்ற முடியும். அதற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டுமாயின் அது தொடர்பான சட்டத்தின்படி அதனை கையகப்படுத்தி அவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்கலாம்.
ஆனால் இவற்றை கைவிட்டு, காலனித்துவ ஆட்சியாளர்களின் சட்டத்தை பயன்படுத்தி இந்த காணிகளை சுவீகரிப்பதானது நீங்கள் செய்வதல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் செய்தவற்றையே நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள். தயவு செய்து இதனை செய்யவேண்டாம். இது சாதாரண விடயமல்ல.
இன்று முல்லைத்தீவு நாளை தீகவாவி அடுத்து யாழ்ப்பாணம் என்று தொடர்ந்துகொண்டு போகும். காணி தீர்வு சட்டம் கிழித்து எறியப்பட வேண்டிய சட்டமாகும். இந்த சட்டம் அன்று மகாராணிக்கு இங்குள்ள காணிகளை பெற்றுக்கொடுக்க கொண்டுவந்த சட்டமாகும். உரிமை யாருக்கு என்பதனை உறுதிப்படுத்த முடியாது போனால் முழுக் காணியும் அரசாங்கத்திற்கு சொந்தமாகிவிடும். அப்போது வெள்ளைக்காரனுக்கு இது தேவைப்பட்டது. ஆனால் இப்போது அது அவசியமற்றது. இதனால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.