Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

July 21, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட “விகமனிக ஹரசர” நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம், அனுராதபுரம், மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார்.

புலம்பெயர் சமூகத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்தவும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், தேவையான கொள்கைகளை வகுப்பதற்கான கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடையே சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறியவும்  ஜனாதிபதி மறக்கவில்லை. 

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நாட்டிற்கு அந்நியச் செலாவணி, ஈட்டித்தந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது. இது பரிசு அல்லது அன்பளிப்பு அல்ல. நீங்கள் செய்த சேவைக்கு நீங்கள் பெற்ற உரிமை என்றுதான் கூற வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் பழைய தொழில்களில் ஈடபட சிலர் விரும்புவதில்லை.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அது மாத்திரம் போதாது என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்படி அர்ப்பணிப்பும் வலிமையும் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, நீங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தீர்கள். அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்றால் நமது பொருளாதாரம் மீண்டு வராது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன்.

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, எதிர்காலம் இல்லாத நாட்டை நான் ஏற்க வேண்டியதாயிற்று. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும்போது, முதல் சில மாதங்களில் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் பணத்தை அனுப்பவில்லை என்றால், எங்களால் நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்திருக்கும்.

மேலும் சரியான நேரத்தில் உரங்களை வழங்க முடிந்ததால், சென்ற போகங்களில் வெற்றிகரமான அறுவடை கிடைத்தது. இதன்மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. நீங்கள் நாட்டுக்கு அனுப்பிய ஒவ்வொரு டொலருக்கும் மதிப்பு அதிகம். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

உங்களது பங்களிப்பின் காரணமாக கடந்த சிங்கள புத்தாண்டு, வெசாக், பொசன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட எம்மால் முடிந்தது. இந்த நிலையில் இருந்து முன்னேறி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எப்பொழுதும் கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.

இதுவரை நாம் பெற்ற வெளிநாட்டு கடனைத் திருப்பி செலுத்தும் வகையில் சலுகைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதால் மாத்திரம் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

நமது அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். தேவையான அளவு அந்நியச் செலாவணி கிடைக்கும் வரை கடன் பெறவேண்டியுள்ளது. நாம் கடன் பெறும்போது, நம் கடன் அதிகரிக்கிறது. எனவே, அந்நியச் செலாவணி அளவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு தொழிலுக்குச் செல்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது அவசியம். தொழிலை முடித்துவிட்டு நாடு திரும்பும் போது தொழில்சார் அறிவு கொண்ட தொழில் முயற்சியாளர்களாக உங்களை மாற்றத் தேவையான வேலைத் திட்டத்தைத் தயார் செய்யுமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். நாம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதுடன் சுற்றுலாப் பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இந்தப் புதிய பாதையில் நாடு முன்னேற வேண்டும்.

மேலும், நாட்டில் விவசாயம் முன்னேற வேண்டும். நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஒரு நாடாக நாம் அச்சமின்றி முன்னேற வேண்டும். பாரிய அளவிலான நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் அதிகம் வருகிறார்கள். இது ஒரு நல்ல நிலைமையாகும். அதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

ஆனால் அது மாத்திரமின்றி, இந்நாட்டின் சாதாரண மக்களையும் முன்னேற்றுவதே எனது நோக்கமாகும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அதற்காக ‘அஸ்வெசும’ மற்றும் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் காணி உரிமைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குத் தேவையான கடன்களை வழங்க 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முன்னேறும்போது, கீழ் மட்ட மக்களை முன்னேற்றத் தேவையான திட்டத்தை தயாரித்துள்ளோம்.

நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கும்போது, தமது கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியில் தாம் அக்கறை செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அதேவேளையில், கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். மீண்டும் நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது.

அரசியல் என்பது, பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதோ, முகத்தைப் பார்த்து வாக்களிப்பதோ அல்ல. தமது எதிர்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும். அதன்போது உங்கள் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகையில்,

“வெளிநாட்டு ஊழியர்கள் 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியதாலேயே ஒரு நாடாக காலூன்றி நிற்க முடிந்தது. 2022 ஆம் ஆண்டில் இது 3 பில்லியன் டொலர்களாக குறைந்து போனது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர்களை வௌிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

சில அரசியல் தலைவர்கள் டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயன்றனர். ஆனால் வௌிநாட்டு தொழிலாளர்கள் அவ்வகையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத் திட்டத்தினால் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த நாட்டுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஈட்டிக்கொண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாகன அனுமதிப் பத்திரத்தை விரைந்து வழங்குதல், ஆறு முறைக்கு மேலாக வெளிநாடு சென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. இன்றும் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டமே முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார கூறுகையில்,

“நாட்டை போரிலிருந்து மீட்க இராணுவத்தினர் பாடுபட்டனர். 2022 ஆம் ஆண்டிலும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கிக்கொண்டதால் உரத் தட்டுப்பாடு, பதிநான்கு மணி நேரம் மின்வெட்டு, எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிக்கு வந்தனர்.

அதன் போது ‘அரகலய’ என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் சிலரால் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆளும் கட்சியாகவிருந்த பொதுஜன பெரமுன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. சவாலை ஏற்றுக்கொள்ள சஜித் பிரேமதாச முன்வரவில்லை. பாராளுமன்ற குழுவினர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து நிர்வாகத்தை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தனர். ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாட்டைக் பொறுப்பேற்க முடியாது என நிபந்தனை முன்வைத்தனர். 

ஆனால் ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றி மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க முன்வந்தார். இன்று நாட்டை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்ப புலம்பெயர் தொழிலாளர்களான உங்களது பங்களிப்பு மிக அவசியமானதாகும்.

இன்று பங்களாதேஷைப் பாருங்கள். கடந்த முறை முந்நூறு நாடாளுமன்றத் தொகுதிகளில் 224 தொகுதிகளை வென்ற ஷேக் ஹசீனா பிரதமராக தெரிவானார். அங்கு தோல்வி கண்ட அரசியல் குழுக்கள், மாணவர் இயக்கம் இணைந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நாட்டை தீக்கிரையாக்கி ஆட்சியைப் பிடிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவிக்கையில்,

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து பொருளாதார வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். 

இன்றும் அந்த வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. வெளிநாட்டு கையிருப்பு 20 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்தாலோசித்து 08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அத்தகைய சாதனைகளை செய்த ஒரே அரசியல் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளார்.” என்று தெரிவித்தார்.

கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் குறிப்பிடுகையில்,

“தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளிநாட்டு பணியாளர்களின் உழைப்பை நாட்டுக்கு தேவையான வகையில் பயன்படுத்தியது. இரண்டு வருடங்களாக நீடித்து வந்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க இந்த வௌிநாட்டு பணியாளர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் இரு பக்கங்களும் பற்றி எரியும் விளக்கை போன்றதாகவே நாட்டின் நிலைமை இருந்தது. 

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் நம்பிக்கை கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு பணத்தை அனுப்ப முன்வந்தனர். தற்போது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. தொடர்ந்தும் அதனை வலுவாக செயற்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில்,

“இலங்கைக்காக வெளிநாடுகளில் பாடுபடுவோரின் குடும்பங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை செயற்படுத்துகிறது. இந்த பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் உங்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றோடு ‘அஸ்வெசும’, ‘உறுமய’ போன்ற வேலைத் திட்டங்களின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணங்களை கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Previous Post

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் நாட்டின் தலைவிதி மோசாக இருந்திருக்கும் | ஜனாதிபதி

Next Post

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர் லீக் இறுதி ஆட்டம் 

Next Post
வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர் லீக் இறுதி ஆட்டம் 

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர் லீக் இறுதி ஆட்டம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures