Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புரட்சியின்றி, நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது – ஜனாதிபதி

May 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புரட்சியின்றி, நீதிமன்றங்களில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது – ஜனாதிபதி

புரட்சியின்றி, நீதிமன்றத்தில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் காணிகளை சுவீகரித்த சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (26) முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட “உறுமய” காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

வவுனியா வைத்தியசாலையை பிரதான வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதாகவும்  வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் ஆரம்பிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் ‘உறுமய’ வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600  முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்விழாவில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,

ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது. 

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்துபோனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய  செயற்பாடாக மாறியுள்ளது. எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இதன் கீழ் சுமார் 18,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என காதர் மஸ்தான் என்னிடம் தெரிவித்தார். அதற்கான ஆவணங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்காக காணி ஆணையாளர் அலுவலகம் மற்றும் நில அளவைத் திணைக்களத்துக் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நான் அண்மையில் அனுமதியளித்தேன். 

இந்நாட்டில் முதன்முறையாக 20 இலட்சம்  முழுமையான காணி உறுதிகளை மக்களுக்கு வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மிகவும் முக்கியமான ஒரு வேலைத்திட்டம் என்றே கூற வேண்டும். இந்த நிலங்களில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்தபோதும் விவசாயம் செய்து வந்தாலும் அந்த மக்களுக்கு காணியில் உரிமை இருக்கவில்லை. 

இந்நாட்டின் அனைத்து இனங்களையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் நாட்டின் விவசாயத்திற்கு பங்களிப்பு செய்த போதிலும் அவர்களுக்கு  காணி உரிமையை வழங்க முடியவில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்தின்போது இது தொடர்பில் நான் சட்டம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றனர். ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு காணி வழங்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், நீதிமன்றத்திற்கு செல்லாமல் வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய அதே சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு  முழுமையான காணி உரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். 

இந்த நிலங்கள் உங்களுக்குரியவை. உங்களின் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் விவசாயம் செய்து வந்த நிலம் இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், இது நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகும். தெற்காசியாவில், நம் நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

மாபெரும் புரட்சி மற்றும் இரத்தம் சிந்திய பின்னரே பொது மக்களுக்கு நில உரிமை கிடைக்கிறது. நாம் புரட்சி இல்லாமல் இந்தப் பணியைச் செய்துள்ளோம். 

மேலும், மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளோம். தமது பிள்ளைகளுக்கு காணி வழங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.

கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்நாட்டு மக்கள் 04 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்தக் கஷ்டத்தை அவர்கள் அமைதியாக அனுபவித்தனர். தற்போது பொருளாதாரம் நல்ல நிலையை எட்டியுள்ளது. இனிமேலாவது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். எனவே, இதன் நன்மையை ஒரு சிலருக்கு மட்டுப்படுத்த முடியாது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக உங்களுக்கு இந்த நில உரிமை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கு சமுர்த்தி திட்டத்தைப் போன்று  மூன்று மடங்கு பலன்கள் கிடைக்கும். மேலும் பயனாளிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சிங்கள தமிழ் புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைக்கு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

நாடு முன்னேற்றமடைந்திருந்த சமயத்தில் அரசாங்கம் மக்களுக்கு இதனை வழங்க முடியவில்லை. வங்குரோத்தடைந்த சமயத்தில் இந்த சலுகைகளை மக்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடியும் என்பதுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த நிபந்தனைகளை சட்டமாக்க எதிர்பார்ப்பதோடு, அதற்கான சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றி போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதற்காக பாராளுமன்றத்தில் பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்ற அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த சில நாட்களாக நான் வட மாகாணத்தில் தங்கியிருந்து பல வைத்தியசாலைகளை திறந்து வைத்துள்ளேன். நல்லாட்சி அரசாங்கத்தின் போது யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும் புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் 04 சுகாதார பிரிவுகளை ஆரம்பிக்கவும் இணக்கம் காணப்பட்டது. கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 04 வருடங்களாக இப்பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்து வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தேன். அத்துடன் கடந்த மார்ச் மாதம்  பருத்தித்துறையில்  புதிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், நேற்று கிளிநொச்சியில் சுகாதாரப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. இன்று வவுனியா மற்றும் மாங்குளம் சுகாதார பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வடமாகாணத்திற்கு சிறந்த சுகாதாரக்  கட்டமைப்பு கிடைக்கிறது.

அத்துடன் யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அண்மையில் தீர்மானித்தோம். அத்துடன் வவுனியா வைத்தியசாலையை பிரதான வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஆளுநருக்கும் மாகாண பிரதம செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன். அதன் பின்னர் அதனை  போதனா வைத்தியசாலையாக மாற்றி வுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்க முடியும். 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வடக்கு மாகாணத்தை துரிதமாக  அபிவிருத்தி  செய்வோம். அதற்கு இதுவே சரியான தருணமாகும். இதற்காக அனைவரும் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது மேலும் சில அதிதிகளின் உரை இடம்பெற்றன. அவை பின்வருமாறு :

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

“மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும் காணி உறுதிப்பத்திரங்கள் பற்றித் தான் எம்மிடம் அதிகமாக வினவுகின்றனர். அந்தத் குறையை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். 20 இலட்சம் பேருக்கு காணி உறுதி வழங்கப்பட உள்ளது. 

இம்மாவட்டத்தில் 600 பேருக்கு காணி உறுதி வழங்கப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரம்  பேருக்கு  காணி உறுதி வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும்.

நாடு இக்கட்டான நிலையில்  நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் நாட்டை பொறுப்பேற்று ஜனாதிபதி  நாட்டை முன்னேற்றி வருகிறார்.  நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

ஜனாதிபதியின் பங்களிப்பின் காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில்  பலஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய முன்னேற்றத் திட்டத்தின் ஊடாக எமது மாகாணம் பாரிய நன்மை அடைய உள்ளது” 

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

“முதல் முறையாக ஜனாதிபதி இந்த மாவட்டத்திற்கு வருகை தந்திருப்பது தொடர்பில்  மக்கள் பெருமகிழ்ச்சியடைகின்றனர். 

நேற்று 376 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் வட மாகாணத்தில் கடமையாற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 566 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மல்லாவி நீர்வழங்கும் திட்டம்  அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஊடாக 40 ஆயிரம் குடும்பங்கள் நன்மை அடையும். பொருளாதார நெருக்கடி நிலையிலும் உலக வங்கியுடனான ஒப்பந்தம் செய்து இதனை ஆரம்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.  அதற்காக இந்த மாகாண மக்கள் சார்பில் எமது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றினால்  1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  உள்வாங்கப்பட்ட 50 ஆயிரம் காணியை விடுவிக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.

இங்குள்ள  மக்களின் பிரச்சினைகளை  ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஒவ்வொரு நாளும் எடுத்து வருகிறார். 

யாழ் மாவட்டத்திலுள்ள பல முக்கிய  இடங்களை சுற்றுலா மையங்களாக மாற்றவும்  ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

வடக்கில்  ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளை  கேட்டறிந்து  தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.”

பாராளுமன்ற உறுப்பினர் சு.நோகராதலிங்கம்

“இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்டு  இடம்பெயர்ந்து வாழ்ந்த கேப்பாப்புலவு பகுதி மக்களுக்கு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. அவர்களை தமது சொந்த மண்ணில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை கோருகிறேன். இந்த மாவட்ட சுகாதாரத் துறை மிகவும் பின்னடைந்துள்ளது. 

வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதார தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றை  நடத்தி  மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கிறேன்.”

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இம்மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.  

இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.  எங்களுடைய மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு  கோருகிறேன்.” 

பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் 

“இதுவரை காலமும் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் யாரும், எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை. இதன்படி வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான காணிகள் வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். 

1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் வனவள திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். வழங்கிய வாக்குறுதிக்கமைய அவர் அந்தக் காணிகளை விடுவித்துத் தந்துள்ளார். 

குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை ஜனாதிபதி விடுத்துள்ளார். யுத்தத்தினால் அதிகமாக முல்லைத்தீவு மாவட்டம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளார். 

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ஏராளமான பணிகளை செய்துமுடித்துள்ளார். 

அன்று இருண்ட நாடாக எமது நாடு இருந்தது. பெட்ரோல், எரிவாயு, பாண் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசையில் நின்றோம். ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. இரண்டு வருட காலத்தில் இந்த நிலைமை மாற்றியுள்ளார். 

அதளபாதளத்திற்குச் சென்ற நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பியுள்ளார். அவரது கரங்களைப் பலப்படுத்தினால் இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக இதனை ஜனாதிபதி மாற்றுவார் என்பதில் மாற்று கருத்து வேறுபாடு இல்லை.”

இந்த நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு | கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

Next Post

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures