இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமான இருமல் மருத்தினை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 200 க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர். அத்தோடு, காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் சுமார் 100 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இந்த மரணங்களுக்கு இருமல் மருந்துகள் சிறுவர்கள் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்தமை காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் ஆறு இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான இந்தோனேசிய இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் மூன்று அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் தலா 1 பில்லியன் இந்தோனேசிய ருபியா ($63,029; £51,7130) அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அஃபி பார்மா (Afi Farma) என்ற மருந்து நிறுவனம் அதிகமான நச்சுப் பொருட்களைக் கொண்ட இருமல் மருந்தினை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, நிறுவனத்தின் வழக்கறிஞர் குற்றத்தை மறுத்ததோடு, மேல்முறையீடு செய்ய பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதங்களுக்கிடையில் இருமல் மருந்தினை தயாரிக்க இரண்டு தொகுதி புரோபிலீன் கிளைகோல் இரசாயனத்தை நிறுவனம் வாங்கியுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
புரோபிலின் கிளைகோலில் 96 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை எத்திலின் கிளைகோல் இருந்துள்ளது.
இரண்டு இரசாயனங்களையும் கரைப்பான்களுக்கு சேர்க்கைகளாகப் பயன்படுத்தலாம். புரோபிலின் கிளைகோல் நச்சுத்தன்மையற்றது மற்றும் மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
எத்திலின் கிளைகோல் (Ethylene glycol) நச்சுத்தன்மையுடையது என்பதோடு, வர்ணப் பூச்சு, பேனாக்கள் மற்றும் பிரேக் திரவங்களில் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
குறித்த நிறுவனம் இருமல் மருந்தில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை பரிசோதிக்கவில்லை எனவும், விநியோகஸ்தர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்களை மட்டும் நம்பியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில், அஃபி பார்மா நிறுவனத்தின் வழக்கறிஞர் பிபிசியிடம், இந்தோனேசியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் மருந்து தயாரிப்பாளர்களின் மூலப்பொருட்களில் கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
கிழக்கு ஜாவாவில் உள்ள கெதிரி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி, நான்கு பிரதிவாதிகளும் பாதுகாப்புத் தரங்களைச் சந்திக்காத மருந்துப் பொருட்களை வேண்டுமென்றே தயாரித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.