இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கேரளாவில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தமிழ் பெண்கள் பயணித்த ஜீப் சுமார் 25 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் தாலபூழா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப்பில் மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஒரு சாரதியும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளைவு ஒன்றில் திரும்பும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சுமார் 25 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் இரண்டாக உடைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய பெண்கள் அனைவரும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 5 பேருக்கு முறையான சிகிச்சை வழங்க மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.