இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் கொண்டாட்டம் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெறவுள்ளது.
பிரிட்டிஷ் இந்திய சிந்தனைக் குழுமம் ‘இந்தியா மற்றும் இந்தோ-பசிபிக்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பு வட்ட மேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முக்கிய உரையை எதிர்க்கட்சித் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் நிகழ்த்தினார். இந்தியா – இங்கிலாந்து உறவுகளை வளர்ப்பதில் தொழிலாளர் கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த, உணர்வு மேலிடச் செய்யும் விடயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது முதல் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது வரை இங்கிலாந்தும் இந்தியாவும் ஒன்றாக நிற்கின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டங்களிலும் ஒன்றாக செயல்பட்டன. இங்கிலாந்து – இந்தியா உறவின் தன்மையும் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
இங்கிலாந்தின் மிகப் பெரிய சிறுபான்மை இனமான பிரித்தானிய இந்தியர்களின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பிரதிபலிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஸ்பின்-அவுட் தளமான 1928 இன்ஸ்டிடியூட், இந்த நிகழ்வானது, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்தைய தலைமுறையினரின் தியாகத்தை நினைவுகூருவதற்கான வாய்ப்பு என்று கூறியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.