Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..”

June 26, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
“நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..”

‘டைம் டு லீட்’ என்று சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தன் திரைப்படத்துக்கு தலைப்பு வைத்தமையால் தலைவர் ஆகிவிடுவாரோ என்று அவரை அரசியல் கொண்டு அடக்கிய கதைகளை அறிவோம். இன்று ‘அண்ணா நீங்க வாங்க…’ என்று அவரை அரசியலுக்கு அழைக்கிறது காலம். ‘நான் ரெடி.. இறங்கி வரவா..’ என்ற பாடலால் அதற்கு பதிலும் கொடுத்திருக்கிறார் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞைகள் பல ஆண்டு காலமாகவே இருக்கின்றது. ஆயினும், அவர் இன்னும் நேரடி அரசியல் களத்தில் இறங்கவில்லை.

இந்நிலையில், தற்போது தனது பிறந்த நாளான இம்மாதம் 22ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்னர், நாளைய வாக்காளர்களான மாணவர்களை சந்தித்து அவர் ஆற்றிய உரை அரசியலில் கவனம் பெற்றுள்ளதோடு, வெகு விரைவில் அவர் நேரடி அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது.

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். நூறு கோடிக்கு மேல் ஒரு திரைப்படத்துக்கு சம்பளம் வாங்கும் நடிகர். மிக பெரிய ரசிகர் பட்டாளம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் அவருக்கு உள்ளது. இந்த இடத்தை ஒரே இரவில் அவர் எட்டி பிடிக்கவில்லை. பல்வேறு தடைகளை தாண்டியே இந்த உச்சத்தை தொட்டிருக்கின்றார். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்பது அவரது திரைப்படங்களின் வசூலிலேயே தெரிந்துவிடும். அவரது திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் வசூல் சாதனையில் எப்போதும் முன்னணியிலேயே இருக்கின்றார்.

ஆரம்ப காலத்தில் மக்களால்  ஏற்றுக்கொள்ளப்படாத நடிகர் போலவே விஜய் இருந்தார். ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் பின்னரே மக்கள் விரும்பும் குறிப்பாக குடும்ப பெண்கள் விரும்பும் நாயகனாக விஜய் மாறினார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் மாறுபட்ட திரைப்படங்கள் வெளிவர தொடங்கியதோடு அவை வெற்றிகளும் பெற்றன. 

விஜய் பொக்ஸ் ஒபிஸ் நாயகனானார். அவருடைய திரைப்படங்கள் ரசிப்பதாக அமைந்ததோடு, அவருக்கென்று பெரும் ரசிகர் கூட்டமும் உருவானது. தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு உதவித்திட்டங்களை விஜய் செய்து வந்தார்.

2008ஆம் ஆண்டில் ‘கில்லி’, ‘போக்கிரி’ என தொடர்ந்து வசூலைக் குவிக்கும் வெற்றிப்படங்களை கொடுத்து ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்கிற பேச்சு எழுந்தது. 2008ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விஜய், அன்றைய தினம் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி, அதற்கென ஒரு கொடியையும் அறிவித்தார்.

‘உழைத்திடு… உயர்ந்திடு… உன்னால் முடியும்’  என்கிற வாசகத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு காணொளியும் வெளியிடப்பட்டது. அதே வருடம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதமும் இருந்தார். இதில் இருந்துதான் விஜய்யின் மீது அரசியல்வாதிகளின் பார்வை விழ ஆரம்பித்தது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு எதிரே சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விஜய், “சினிமாவைத் தாண்டி இப்படி உணர்வுள்ள ரசிகர்கள் எனக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனப் பேசினார். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் விஜய் நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்று இயக்கத்தின் நிகழ்வுகளில் கலந்துகொண்டார் விஜய். அப்படி 2009ஆம் ஆண்டு புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த விஜய், “அரசியல் எனும் கடலில் இறங்கணும்னா ஆழம் பார்க்கணும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் இந்த இயக்கத்தை நடத்தினால் என் குடும்பம், என் தொழிலை விட இந்த கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றும்; புதுச்சேரியில் “அரசியல்தான் என் நோக்கம். ஆனால், நிதானமாக வருவேன்” என்றும் பேசினார்.

2009ஆம் ஆண்டில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வைத்தியலிங்கம் தலைமையில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தினார், விஜய்.

அதே ஆண்டில் ராகுல் காந்தியையும் சந்தித்தார் விஜய். இந்தச் சந்திப்புக்கு முன்னால் வரைக்கும் விஜய் தி.மு.க.வுக்குதான் ஆதரவாக இருக்கிறார் என்கிற ஒரு பிம்பம் இருந்தது.

விஜய்யின் இந்தத் தனிப்பட்ட சந்திப்புகள் காரணமாக அவருக்கு நெருக்கடிகளும் வந்தன. அப்படித்தான் 2011ஆம் ஆண்டு விஜய்யின் ‘காவலன்’ படத்தின் வெளியீட்டின்போது சிக்கல்களை ஏற்படுத்தி, படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தன. இந்த சமயத்தில் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவானார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் “அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அணிலாக இருப்பேன்” என்று கூறினார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தில் “நான் ஆளும் கட்சி” என்றும் வசனம் பேசியிருப்பார். அ.தி.மு.க.வுடன் நல்ல உறவில் இருந்த விஜய்க்கு 2013ஆம் ஆண்டு ‘தலைவா’ படம் மூலம் அதிலும் விரிசல் வந்தது. டைம் டூ லீட் என்ற உப தலைப்பு பிரச்சினையை உருவாக்கியது. இதனால் இத்திரைப்படம் வெளிவருவதில் சிக்கலை சந்தித்தார் விஜய்.

இது தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயன்றும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால், விஜய் ஒரு காணொளி வெளியிட்டார். அதில் அ.தி.மு.க.வின் ஆட்சியை புகழ்ந்து பேசியிருப்பார். அதன் பிறகுதான் ‘தலைவா’ படம் தமிழ்நாட்டில் வெளியானது. இந்த பிரச்சினையினால் விஜய்யும் அதன் பிறகு அ.தி.மு.க.வுடன் நட்புறவில் இல்லை. அதேபோல் 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு சென்று, “ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று இங்கு வந்தேன்” என்றார்.

இதற்கு பிறகு 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்த நரேந்திர மோடியை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என கூறிய விஜய், அதன் பிறகு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டார்.

அப்படியிருந்தும் அவரது திரைப்படங்களில் அரசியல் பேசப்பட்டதோடு அவை மத்திய மாநில அரசியலில் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மத்திய அரசை தாக்குவதாக இருந்தமையால் பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பா.ஜ.க.வின் எச்.ராஜா ‘ஜோசப் விஜய்’ என விஜயின் பெயரை வைத்து மத ரீதியான பிரச்சினையை கிளப்புவது போல் பேசியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இதில் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்ததோடு தேசிய ரீதியில் இந்த பிரச்சினை பேசப்பட்டது. இந்நிலையில், வருமான வரி சோதனைகள் அடிக்கடி விஜயை நோக்கி நடத்தப்பட்டமையும் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுகிறது.

ஆயினும், விஜய் நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது, மேடையில் பேசிய விஜய்,  மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விடயங்களை பகிர்ந்திருந்தார். அத்தோடு அரசியலும் பேசினார்.

விஜய் தனது பேச்சின் தொடக்கத்திலேயே கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில், ‘அசுரன்’ பட வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். 

“இந்த நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ய சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான் காரணம். ‘காடு இருந்தால் எடுத்துக்கிடுவானுவ; இருந்தா புடுங்கிடுவானுவ ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது’ என்கிற அந்த வசனம் என்னை கவர்ந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தமான வசனம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதனால்தான் என் தரப்பில் ஏதாவது செய்யணும் என்று நினைத்தேன். அதற்கான நேரம் இது. நாளைய தலைமுறையினராக உள்ள நீங்கள் தலைவர்கள் குறித்து அதிகம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து மாணவ, மாணவியர் படிக்க வேண்டும்” என்றார்.

சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிட அரசியல் பேசும் கட்சிகள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றன.

அதைக் கூர்ந்து கவனித்துள்ள விஜய், அதே வரிசையில் தனது அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

தொடர்ந்து முழுமையான கல்வி குறித்து அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருத்தையும் பகிர்ந்தார். அப்படியே குணாதிசய பண்பு குறித்துப் பேசிய அவர், சமகால தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் பங்கு குறித்தும் பேசினார்.

குறிப்பாக, வாக்கு செலுத்த பணம் பெறுவது கூடாது என்ற கருத்தை உறுதிபட முன்வைத்தார். இந்த மாற்றம் நிச்சயம் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவசியம் நிகழ வேண்டும் என்பது அவர் பேசியதில் புரிந்துகொள்ள முடிந்தது.

அதேபோல் அவரது இலக்கு அடுத்து வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இவற்றை அவரது சமீபகால நலப்பணி திட்டங்கள் குறித்த அறிவிப்பிலும் நடவடிக்கைகளிலும் ‘தொகுதி வாரி’ என்ற சொல் தவறாமல் இடம்பெறுவது உறுதி செய்கிறது.

அதேபோல், அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாணியை விஜய் பின்பற்றுவதையும் கவனிக்க முடிகிறது. பல்லாண்டுகளாக ரசிகர்கள் மன்றங்கள், ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலமாக ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கி, அதை அரசியல் கட்சியாக மாற்றியவர் விஜயகாந்த். அவர் வழியிலேயே விஜய் வளர்ந்து வருவதையும் கவனிக்கலாம். 

விஜய் பல காலமாக கிராமம், வட்டம், மாவட்டம் என அடி மட்டத்தில் இருந்தே தனது ரசிகர்மன்றம் மூலமாக அடிமட்டத்தில் இருந்தே மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் மக்கள் பணிகள் நடைபெற்று வருவதோடு மக்களுடன் நேரடி தொடர்பும் உள்ளது. இதுதான் கடந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வெற்றி பெற காரணம்.

விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் தான் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் தொடக்கத்தின் முதல் கட்டமாக 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் போட்டியிட்டு, அதில் 120க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றார்கள். அவர்கள் அனைவரையும் விஜய் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரபூர்வ யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் திறக்கப்பட்டன. அதில் இயக்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கத்தினர்களை சென்னைக்கு வரவழைத்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இவ்வாறாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது.

அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயற்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி, அவர் அரசியலுக்கு வருவதை மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்துகிறது. இந்தப் போக்கு அடுத்தடுத்து எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும். 

இதனிடையே விஜயிடன் பரிசு பெற்ற மாணவி ஒருவர், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். மேடையில் பேசிய அவர், “நா மதுரையில் இருந்து வரேன். அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய உண்மையான அண்ணாவாக என்னைக்கும் நினைப்பேன். அண்ணாவின் படம் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் பல கோடி வசூலித்துவிடும். அவர் நடித்த படத்தில் ஒரு ஓட்டா இருந்தாலும் அது எவ்ளோ முக்கியங்கிறத பத்தி பேசியிருந்தது எனக்கு ஆழமாக பதிந்துவிட்டது. அடுத்த வரும் நான் போடப்போற வோட்டுக்கு மதிப்பு இருக்குங்கிறத புரிஞ்சுக்கிட்டேன். அதற்கு அண்ணா வரணும். என்னுடைய வோட்டை மதிப்புமிக்க ஒன்றாக நீங்க மாத்தணும். எங்களைப் போன்று ஏழைகளுக்கு உங்களுடைய கருணை கையை கொடுத்த மாதிரி, இனி வரக்கூடிய எல்லாத்துக்கும் தனி ஒருவனாக இல்லாமல் தலைவனாக வர வேண்டும்” என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இந்த நடவடிக்கைகளைப் பார்த்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துத்தான் விஜய் காய் நகர்த்துகிறார் என்கிறார்கள். அதற்கு ஏற்றார்போல் சமீபத்தில் வந்த ‘லியோ’ படத்தின் பாடலிலும் “நான் ரெடிதான் வரவா அண்ணன் நான் இறங்கி தனியா வரவா… தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா” என விஜய் பாடியிருக்கிறார்.

உண்மையில் தமிழக அரசியலுக்கு நடிகர்கள், நடிகைகள் வருவது ஒன்றும் புதிய விடயமில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே பலர் வந்திருக்கிறார்கள். சிலர் நிலைத்திருக்கிறார்கள். சிலர் காணாமல்  போயிருக்கிறார்கள். விஜய் தான் அரசியலுக்கு வருவதாகவோ தேர்தலில் போட்டியிடப் போவதாகவோ இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அரசியலுக்கு வருவது போல அவரது பெற்றோர் தன்னிச்சையாக சில கருத்துக்களை தெரிவித்து விஜயுடன் முரண்பட்டு நிற்பதனை நாம் அறிவோம். ஆயினும் விஜய் அரசியலில் தனித்து இறங்கினாலும் விஜயின் மக்களுடனான கட்டமைப்பு அவரை நிலைத்திருக்க செய்யும். எது எப்படியோ விஜய் மனதில் அரசியல் தொடர்பில் என்ன எண்ணம் இருக்கின்றது என்பதனை அவரது அடுத்தகட்ட நகர்வை பொறுத்தே நாம் அறியலாம்.

Previous Post

மீண்டும் குறைகிறது எரிவாயுவின் விலை! வெளியானது அறிவிப்பு

Next Post

2025 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஐக்கிய அமெரிக்காவில் | முதல் தட‍வையாக 32 அணிகள்

Next Post
பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

2025 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஐக்கிய அமெரிக்காவில் | முதல் தட‍வையாக 32 அணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures