மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிசெய்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் நடைபெறுமா? இரத்துச் செய்யப்படுமா? என எழுந்த சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் ஆசிய கிரிக்கெட் பேரவை இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (15) விடுத்தது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும்.
இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற பாகிஸ்தானின் யோசனையை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்தே இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதற்கு அமைய பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இலங்கையில் 9 போட்டிகளுமாக மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தானில் 4 போட்டிகளும் லாகூரில் நடைபெறும்.
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு குழுவிலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன.
இந்த இரண்டு குழுகளிலும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெறும். சுப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விiளையாடும்.
இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்ததால் ஆசிய கிண்ண கிரிக்கெட் சிக்கலை எதிர்கொண்டது.
எனினும் பாகிஸ்தானில் சாத்தியமில்லாத போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆரம்பத்தில் வலியுறுத்தியது. ஆனால், மற்றைய ஆசிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற யோசனை மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது ஆகியன இரண்டு பரஸ்பர பிரத்தியேக நிகழ்வுகளாக நோக்கப்படுகிறது.