இயக்குநரும், தயாரிப்பாளரும், நட்சத்திர நடிகருமான சுந்தர். சி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தலைநகரம் 2’. இதில் சுந்தர். சி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாலக் லால்வானி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஐரா, ஜெய்சி ஜோஸ், விஷால் ராஜன், சேர்ன்ராஜ், விஜய் சத்யா, யாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எம். பிரபாகரன் தயாரித்திருக்கிறார்.
பல தடைகளைக் கடந்து ‘தலைநகரம் 2’ எதிர்வரும் 23ஆம் திகதியன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் சசி, நடிகர்கள் பரத், வெற்றி, ஜாய்ஸி ஜோஸ், விஜய் சத்யா, தயாரிப்பாளர் எஸ் எம் பிரபாகரன், இயக்குநர் வி. இசட். துரை, நாயகன் சுந்தர். சி, நடிகை அயிரா உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
இதனிடையே இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. இதில் சுந்தர் சி ஏற்று நடித்த கதாபாத்திரம் ரைட். ‘தலைநகரம் 2’ படத்தில் மீண்டும் சுந்தர் சி கதையின் நாயகனாக… ரைட் எனும் கதாபாத்திரத்தில் நடித்தாலும், கதைக்களமும், திரைக்கதையும் புதிது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.