சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என வெளியான வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நாளை வெளியாக உள்ளது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .
இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில் வெளியிடக்கூடாது என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாடு உளவுத்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை வெளியிட்டால் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி என தலைப்பிட்டு ”காம்ரேட் ஆஃப் கேரளா” எனும் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற திருமணம் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த திருமணம் கேரள மாநிலம் ஆழப்புழாவில் உள்ள காயம்குளம் பகுதியில் உள்ள செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் சார்பில் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஆழப்புழா எம்பி ஆரிஃப் கலந்து கொண்டார்.
அஞ்சு மற்றும் சரத் ஆகிய ஜோடிக்கு இந்து மத சடங்குகளின் படி பள்ளிவாசலில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு நடத்தில் வைத்த திருமணம் பெரிய அளவில் பேசுபொருளானது. கேரளா ஸ்டோரி படம் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அஞ்சு மற்றும் சரத் இருவருக்கும் இந்து முறைப்படி பள்ளிவாசலில் நடைபெற்ற திருமணம் தொடர்பான காணொளியை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து “ மனிதகுலத்திற்கான அன்பு என்பது நிபந்தனையற்றது மற்றும் ஆற்றுப்படுத்தக் கூடியது.” குறிப்பிட்டுள்ளார்.