இந்திய தேசிய அணியில் இடம்பெறாத வீரராக இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டியவர் ராஜஸ்தான் றோயல்ஸின் இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆவார்.
இண்டியன் ப்றீமியர் லீக் வரலாற்றில் 1000ஆவது போட்டியில் (ஏப்ரல் 30) மும்பைக்கு எதிராக 62 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 124 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஜய்ஸ்வால் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார்.
இதன் மூலம் 12 வருடங்களாக இருந்து வந்த சாதனையை ஜய்ஸ்வால் முறியடித்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் இலவன் பஞ்சாப் வீரர் போல் வால்தாட்டி, தேசிய விரர் அல்லாதவராக 112 ஓட்டங்களைக் குவித்து முன்னைய சாதனைக்கு உரித்தானவராக இருந்தார்.
அதற்கு முன்னர் தேசிய அணியில் இடம்பெறாதவர்களாக அவுஸ்திரேலியாவின் ஷோன் மார்ஷ் (கிங்ஸ் இலவன் பஞ்சாப்) 115 ஓட்டங்களையும் இந்தியாவின் மனிஷ் பாண்டே (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்) ஆட்டம் இழக்காமல் 114 ஓட்டங்களையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனையாளர்களாக இருந்தனர்.
யார் இந்த ஜய்ஸ்வால்?
யஷஸ்வி பூப்பேந்த்ரா குமார் ஜய்ஸ்வால் என்ற பெயரைக் கொண்ட இந்த இளம் வீரர் உத்தர் பிரதேசத்தில் சிறிய வன்பொருள் கடை உரிமையாளர் பூப்பேந்த்ரா ஜய்ஸ்வாலுக்கும் கான்ச்சன் ஜய்வாலுக்கும் 2001 டிசம்பர் 28ஆம் திகதி பிறந்தார். 6 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் 4ஆவதாக பிறந்தவர்தான் ஜய்ஸ்வால்.
மும்பை அஸாத் மைடான் பயிற்சியகத்தில் பயிற்சி பெறுவதற்காக தனது 10ஆவது வயதில் ஜய்ஸ்வால் மும்பைக்கு சென்றார். பயிற்சியின்போது தங்குவதற்கு இடம் கிடைக்காததால் மைதான பராமரிப்பாளரின் கூடாரத்தில் தங்கியிருந்தவாறு பயிற்சிகளில் ஈடுபட்டார்.
மூன்று வருடங்களாக கூடார வாழ்க்கையுடன் பசியையும் பட்டினியையும் அனுபவித்துவந்த ஜய்ஸ்வாலின் ஆற்றலை 2013இல் இனங்கண்டவர் சான்டகுரூஸ கிரிக்கெட் பயிற்சியக உரிமையாளர் ஜ்வாலா சிங் ஆவார்.
2015இல் நடைபெற்ற பாடசாலை கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 319 ஓட்டங்களைக் குவித்த ஜய்ஸ்வால், பந்துவீச்சில் 99 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்களைக் கைப்பற்றி தனது சகலதுறை கிரிக்கெட் ஆற்றலை முதல் தடவையாக வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 16 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட மும்பை இளையோர் அணியில் இடம்பிடித்த ஜய்ஸ்வால், 2019இல் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 173 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த ஜய்ஸ்வால், அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி 6 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 400 ஓட்டங்களைக் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.
அந்த வருட 19 வயதுக்குட்பட்ட இறுதிப் போட்டியில் பங்ளாதேஷிடம் துரதிர்ஷ்டவசமாக இந்தியா டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தோல்வி அடைந்தது.
முழு உலகிலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் இரட்டைச் சதம் குவித்த வீரர் என்ற சாதனையையும் ஜய்ஸ்வால் இன்றும் தன்னகத்தே கொண்டுள்ளார்.
2020 ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஜய்ஸ்வால் அறிமுகமானார்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் யஷஸ்வி ஜய்ஸ்வாலை ராஜஸ்தான் றோயல்ஸ் 9 கோடியே 28 இலட்சம் ரூபாவுக்கு (இலங்கை நாணயப்படி) வாங்கியிருந்தது.
இந்தளவு பெருந் தொகைக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் தன்னை விலைக்கு வாங்கியது மிகவும் சரி என்பதை நியாயப்படுத்தும் வகையில் துடுப்பாட்டத்தில் அசத்திவருகிறார் ஜய்வால்.
‘நான் செயலில் கவனம் செலுத்தவும் கடினமாக உழைக்கவும் விரும்புவதுடன் என்னில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் எப்போதும் நேர்மறையாக இருந்துவருவதுடன், ஒரு பொருத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றிவருகிறேன். உடற்தகுதியை சிறப்பாக பேணிவருகிறேன்’ என ஐபிஎல்லில் சாதனைமிகு சதம் குவித்த ஜய்ஸ்வால் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய ஆற்றலும் நம்பிக்கையும் கொண்ட 21 வயதான ஜய்ஸ்வால் வெகுவிரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.