சூடானிலிருந்து இருநூற்றுக்கும் அதிகமானோரை இராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் தான் வெளியேற்றுவதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.
இராஜதந்திரிகள், படையினர், ஏனைய ரஷ்ய பிரஜைகள் மற்றும் உதவி கோரிய ஏனைய நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்படுபவர்களில் அடங்கியுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
4 இராணுவப் போக்குவரத்து விமானங்கள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் சூடானும் நீண்ட காலமாக நல்லுறவைக் கொண்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் 3 தசாப்தகால ஆட்சியின்போது, சூடானுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகித்தது.
டார்பூர் பிரச்சினை காரணமாக, 2005 ஆம் ஆண்டில் சூடானுக்கு ஐநா தடைகளை விதித்த பி;ன்னரும் ரஷ்யா ஆயுதங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.
அல் பஷீரின் ஆட்சியின் பின்னர் ரஷ்யா சற்று விலகியிருந்தது. எனினும், சூடானில் 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி ஏற்பட்ட பின்னர் ரஷ்யா மீண்டும் நெருக்கமாகியது.
ரஷ்யாவின் வாக்னேர் துணை இராணுவப் படையினர் பல வருடங்களாக சூடானில் உள்ளதுடன், அங்குள்ள தங்கச் சுரங்கங்களைப் பாதுகாப்பதற்கு உதவி வருகின்றனர்.