மொன்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரரான அண்ட்ரே ரூப்லெவ் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பிரான்ஸின் மொனாகோவில் உள்ள மொன்டே கார்லோ அரங்கில் நேற்று (16) நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனியும், ரஷ்யாவின் அண்ட்ரே ரூப்லெவ்வும் மோதிக்கொண்டனர்.
மூன்று செட்கள் அடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை ஹோல்கர் ரூனி பெரும் போரட்டத்துக்கு பின்னர், 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். எனினும், இரண்டாவது செட்டில் வீறுகொண்டு எழுந்த அண்ட்ரே ரூப்லெவ், இரண்டாவது செட்டை 6க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான செட் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் சரமாரியாக அடித்தாடினர்.
எவ்வாறாயினும், இறுதியில் 7க்கு 5 என்ற கணக்கில் அண்ட்ரே ரூப்லெவ் கைப்பற்றினார். இதன் மூலம் மூன்று செட்கள் அடங்கிய இப்போட்டியை 2க்கு 1 என்ற செட் கணக்கில் வென்ற ரஷ்ய வீரரான அண்ட்ரே ரூப்லெவ் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.