இண்டியன் பிறீமியர் லீக்கின் 16ஆவது அத்தியாயத்தில் மிகவும் அற்புதாக விளையாடி வரும் ராஜஸ்தான் றோயல்ஸ், ஞாயிற்றுக்கிழமை (16) இரவு நடைபெற்ற நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை ஈட்டியுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ராஜஸ்தான் றோயல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது 11ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட் வீழ்த்தப்பட, அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 55 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் குஜராத் டைட்டன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என கருதப்பட்டது.
57 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 123 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் சஞ்சு செம்சனும் ஷிம்ரன் ஹெட்மயரும் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற போராட்டத்திற்கு மத்தியில் துணிச்சலை வரவழைத்து அதிரடியில் இறங்கி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினர்.
அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து ராஜஸ்தான் றோயல்ஸுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
சஞ்சு செம்சன் 32 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 60 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து துருவ் ஜுரெல் (18), ரவிச்சந்திரன் அஷ்வின் (3 பந்துகளில் 10) ஆகியோரின் பங்களிப்புடன் மறுபுறத்தில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஷிம்ரன் ஹெட்மயர் கடைசி ஓவரில் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
26 பந்துகளை எதிர்கொண்ட ஹெட்மயர் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மொஹமத் ஷமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
ரிதிமான் சஹா (4) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தது. தொடர்ந்து சாய் சுதர்ஷன் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார். (32 – 2 விக்.)
எனினும் ஷுப்மான் கில், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
ஹார்திக் பாண்டியா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஷுப்மான் கில் (45), டேவிட் மில்லர் (46), அபிநவ் மனோஹர் (27) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி குஜராத் டைட்டன்ஸை சிறந்த நிலையில் இட்டனர்.
பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.