உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டொக் செயலியை உத்தியோகபூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி,
“டிக்டொக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டொக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது.
கனடா அரசு செயலகத்தின் திறைசேரி அறிக்கையின்படி,
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டொக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். மேலும் பயன்பாட்டின் தற்போதைய நிறுவல்கள் அகற்றப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டொக் செயலி சீன நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.
டிக்டொக் அல்லது அதன் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒப்படைக்க சீன அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்படலாம் என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் 20 க்கும் மேற்பட்ட மாநிலங்கள், இராணுவம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலியை நீக்கியுள்ளன.
பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தங்கள் வலையமைப்புகளில் பயன்பாட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.
இந்தியாவிலும் பல ஆசிய நாடுகளிலும் பரந்த பொதுத் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சீன அரசாங்க அதிகாரிகளுக்கு பயனர் தரவை அணுக முடியாது என்றும், உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் செயலியில் இருந்து சீனப் பதிப்பானது தனித்தனியாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால் கடந்த ஆண்டு, சீனாவில் உள்ள சில ஊழியர்கள் ஐரோப்பிய பயனர்களின் தரவை அணுக முடியும் என்று நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இதனால், ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களுக்கான தடை மார்ச் 15 முதல் நடைமுறைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.