பனாமாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவை அடையும் நோக்குடன் சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பனாமா சிட்டியிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று புதன்கிழமை இவ்விபத்து இடம்பெற்றது.
பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததாகவும் அவ்வேளையில் 66 பேர் பஸ்ஸில் இருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 முதல் 11 வயதான 10 சிறார்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை பணிப்பாளர் ஜொனி பரா தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவை சென்றவடைவதற்காக வந்த வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. எனினும் கியூப பிரஜைகளும் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ன் என கியூப வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பனாமா, கொஸ்டாரிக்கா, நிக்கரகுவா, ஹொண்டுராஸ் முதலான மத்திய அமெரிக்க நாடுகள், மெக்ஸிகோவைக் கடந்து அமெரிக்காவை அடைவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடையிலுள்ள ‘டேரியன் கெப்’ எனும் அடர்ந்த காட்டுப் பகுதியை இவர்கள் கடந்திருந்தனர். அதன்பின் கொஸ்டாரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் விடுதியொன்றில் தங்குவதற்கு திட்டமிட்டிருந்தனர்.
அந்த பஸ் விடுதியை கடந்து சென்றதால், பஸ்ஸை திருப்புவதற்கு சாரதி முற்பட்டபோது, அது பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கீழேயுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த மினி பஸ் ஒன்றுடனும் அந்த பஸ் மோதியது. மினி பஸ் சேதமடைந்தபோதிலும் அதிலிருந்த இவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.