ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சவால்மிக்கதே. எனவே கிரிக்கெட் வீராங்கனைகள் என்ற வகையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனது அனுபவத்தை இளையவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
அவர்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தத்தை தோள்களில் போட்டுக்கொள்ளவேண்டாம் என்பதுதான். இயல்பாகவும் நேர்மறையாகவும் விளையாடினால் சாதகமான முடிவுகளை எம்மால் பெற முடியும்’ என இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து கூறினார்.
தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக வியாழனன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சமரி அத்தபத்து இதனைக் குறிப்பிட்டார்.
கேப்டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவும் இலங்கையும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி தொடர்பாக ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சமரி அத்தபத்து, ‘மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் வரவேற்பு நாடு என்ற வகையில் தென் ஆபிரிக்காவுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால், சொந்த நாட்டில், சொந்த இரசிகர்கள் முன்னிலையில் தென் ஆபிரிக்கா விளையாடுவதால் அவ்வணி இயல்பாகவே அழுத்தத்தை எதிர்கொள்ளும். இது எமக்கு சாதகத்தன்மையாக அமையும்.
ஒரு பாடசாலை கிரிக்கெட், ஒரு கழக கிரிக்கெட் போன்று இந்தப் போட்டியை எடுத்துக்கொண்டு இயல்பாக விளையாடுமாறு எனது அணியினருக்கு கூறியுள்ளேன். திட்டமிடல்களுக்கு அமைய நாங்கள் திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார்.
‘தென் ஆபிரிக்க அணியில் அனுபவசாலிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் உலகம் முழுவதும் நிறைய தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதை நாம் அறிவோம். எமது அணியில் அனுபவம் வாய்ந்த சில சிரேஷ்ட வீராங்கனைகளும் திறமைவாய்ந்த இளம் வீராங்கனைளும் இடம்பெறுகின்றனர். அவர்களும் நானும் திறமையாக விளையாட கூடியவர்கள்.
எங்களால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நாங்கள் ஒவ்வொருவரும் நம்புகிறோம். நாங்கள் ஓரணியாக அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தினால் எந்தவொரு அணியையும் எம்மால் வீழ்த்த முடியும். அதற்கான நம்பிக்கையும் மனஉறுதியும் எம்மிடம் இருக்கிறது’ என சமரி அத்தபத்து மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை.
மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கையின் பெறுபேறுகள் திருப்பதிகரமாக இல்லை. இலங்கை விளையாடியுள்ள 121 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 34 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதுடன் 83இல் தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள அணிகளுடனான பெறுபேறுகளும் திருப்திகரமாக இல்லை.
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் குழு 1இல் இலங்கை இடம்பெறுகிறது. அவற்றில் பங்களாதேஷுக்கு எதிராக மாத்திரமே இலங்கை சிறந்த பேறுபேறுகளைக் கொண்டுள்ளது. மற்றைய அணிகளுடனான போட்டிகளில் இலங்கையின் பேறுபெறுகள் பாதகமாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலத்த சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
பங்களாதேஷுக்கு எதிராக விளையாடியுள்ள 8 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 6 – 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
ஆனால், அவுஸ்திரேலியா (0 – 6), நியூஸிலாந்து (0 – 9) ஆகிய அணிகளுக்கு எதிரான சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள இலங்கை, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய 10 போட்டிகளில் 3இல் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. மற்றைய 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
எனவே, இன்றைய ஆரம்பப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்த வேண்டி வரும்.
இலங்கை குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, விஷ்மி குணரட்ன, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர, சத்யா சந்தீப்பனி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கன, மல்ஷா ஷெஹானி, தாரிகா செவ்வந்தி, ஹசினி பெரேரா.