இலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த றக்பி கழகங்களில் ஒன்றான சிலோனிஸ் றக்பி அண்ட் புட்போல் க்ளப்பின் (CR & FC) 100 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு அழைப்பு அணிக்கு எழுவர் றக்பி சுற்றுப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இலங்கையின் முதல்தர கழகங்களைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், பாடசாலை அணிகள் என்பன பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டி மார்ச் 31ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு மிகவும் வண்ணமயமாகும் போட்டித்தன்மை மிக்கதாகவும் அமையும் வகையில் அவுஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் மகளிர் அணிகளை அழைக்கவுள்ளதாக சுற்றுப் போட்டி பணிப்பாளர் டில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வகையில் கேணல் ஈ. எச். ஜோசப் என்பவரால் லோங்டன் ப்ளேஸில் அமைந்துள்ள சிலோனிஸ் றக்பி அண்ட் புட்போல் க்ளப் 1922இல் ஸ்தாபிக்கப்பட்டது. கழகம் ஆரம்பித்து 4 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக க்ளிபர்ட் கிண்ண றக்பி இறுதிப் போட்டியில் விளையாடிய சீ.ஆர். அண்ட் எவ்.சி., இதுவரை 14 தடவைகள் கிளிபர்ட் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
போட்டியின் முதலாம் நாளான மார்ச் 31ஆம் திகதியன்று 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிகள் நடைபெறும். இப் போட்டியில் 12 பாடசாலை அணிகள் 3 குழுக்களில் விளையாடும்.
அன்றைய தினம் பிரதான கிண்ணம் மற்றும் கோப்பைக்கான கால் இறுதிப் போட்டிகள் மாலையில் நடைபெறும்.
இரண்டாம் நாளன்று ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான லீக் போட்டிகளும் கால் இறுதிப் போட்டிகளும் நடத்தப்படும்.
கடைசி நாளான ஏப்ரல் 2ஆம் திகதி சகல பிரிவுகளுக்குமான அரை இறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் நடத்தப்படும்.
இந்த சுற்றுப் போட்டி தொடர்பாக கருத்து வெளியிட்ட சீ.ஆர். அண்ட் எவ்.சி. தலைவர் டெட் முத்தையா, ‘எமது நூற்றாண்டு விழா வைபவங்களில் சீ.ஆர். அண்ட் எவ்.சி. நூற்றாண்டு விழா அணிக்கு எழுவர் றக்பி போட்டி பிரதான இடத்தைப் பிடிக்கவுள்ளது. அத்துடன் றக்பி வீர, வீராங்கனைகளாலும் இரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.
இப் போட்டியில் பங்குகொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுத்த சகல அணிகளும் அதனை ஏற்று பங்குபற்ற முன்வந்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாத இறுதியில் றக்பி கொண்டாட்டத்தைக் காணக்கூடியதாக இருக்கும்’ என குறிப்பிட்டார்.
இதேவேளை, ‘றக்பி விளையாட்டை விரும்பும் இரசிகர்கள் நூற்றாண்டு விழா அணிக்கு எழுவர் றக்பி போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள். மேலும் இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு எம்மோடு இணைந்துள்ள அனுசரணையார்களுக்கு கழகம் சார்பாக நன்றி பகர்கிறேன்’ என கழகத்தின் முன்னாள் தலைவர் ஜெஹான் கனகரட்னம் தெரிவித்தார்.
போட்டிகள் நியாயமாகவும் நேர்மையாகவும் அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மத்தியஸ்தர்களை அழைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இந்த றக்பி சுற்றப் போட்டியில் பிரதான கிண்ணப் பிரிவில் சம்பியனாகும் அணிகளுக்கும் 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கும் வெற்றிக் கிண்ணங்களுடன் பணப்பரிசுகள் வழங்கப்படும்.
ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் சம்பியனாகும் அணிகளுக்கு தலா 500,000 ரூபா
இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 250,000 ரூபா.
பாடசாலைகள் பிரிவில் சம்பியன் அணிக்கு 250,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 125,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
பங்குபற்றும் அணிகள்
ஆடவர்: சீ.எச். அண்ட் எவ்.சி., சீ.ஆர். அண்ட் எவ்.சி., ஹெவ்லொக்ஸ், கண்டி, விமானப்படை, இராணுவம், கடற்படை, பொலிஸ்.
மகளிர்: சீ.ஆர். அண்ட் எவ்.சி., விமானப்படை, இராணுவம், கடற்படை, அவுஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, கூட்டு அணி.
பாடசாலைகள்: டி.எஸ். சேனாநாயக்க, இஸிபத்தன, கிங்ஸ்வூட், றோயல், புனித அந்தோனியார், புனித சூசையப்பர், புனித பேதுருவானவர், சென் தோமஸ், திரித்துவம், வித்யார்த்த, வெஸ்லி, ஸாஹிரா.