அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட பலூன் ஆனது, சீனாவின் அதிக எண்ணிக்கையிலான உளவு பலூன் தொகுதியின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
இத்தகைய பலூன்கள் சீனாவின் ஹெய்னன் மாகாணத்திலிருந்து இயக்கப்படுவதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர் என வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான், இந்தியா, வியட்நாம், தாய்வான், பிலிப்பைன்ஸ் நாடுகளும் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக மேற்படி அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்கள் அமெரிக்க வான் பரப்பில் பறந்து திரிந்த மேற்படி பலூன், அத்திலாந்திக் சமுத்திரத்தை அடைந்தவுடன் கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது,
200 அடி உயரமான இந்த பலூன், சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா கூறுகிறது.
எனினும், அது உளவு பலூன் அல்ல எனவும், காலநிலை ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த அந்த பலூன் கடும் காற்று காரணமாக அது அமெரிக்க வான்பரப்புக்குள் புகுந்துவிட்டது எனவும் சீனா கூறுகிறது.
ஆனால், உலகளாவிய ரீதியில் இலக்குவைக்கப்பட்ட இடங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்காக செலவு மிகுந்த கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே இது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்தனி பிளின்கன் கூறியுள்ளார்.
இந்த பலூனின் சிதைவுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை நட்பு நாடுகளுடன் அமெரிக்க பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் பிளின்கன் கூறியுள்ளார்.