தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா, ”பெற்றோர்களிடத்தில் நாளாந்தம் பத்து நிமிடம் செலவழித்து, அவர்களை மகிழ்ச்சிகரமானவர்களாக வைத்துக் கொள்ளுங்கள்” என இளைய தலைமுறையினரிடத்தில் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் இந்திய திரையுலகைச் சார்ந்த நட்சத்திர பிரபலங்கள், தங்களது படத்தினை விளம்பரப்படுத்த இணைய உலகில் வலிமையுடன் திகழும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா, அவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கும் திரைப்படத்தினை மட்டும் விளம்பரப்படுத்தி வருகிறார்.
மேலும் திரைப்பட விழாக்களிலும், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதை விரும்பாத நயன்தாரா, சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
அதன் போது அங்கு திரளாக கூடியிருந்த கல்லூரி மாணவ மாணவிகளிடத்தில் அவர் உற்சாகமாகப் பேசினார்.
அவர் பேசுகையில், ” கல்லூரியில் படிக்கும் போது நட்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். சுதந்திரமாகவும், கனவுகளுடனும் சந்தோஷமாகவும் திரிவோம். இது தவறில்லை.
ஆனால் கல்லூரியில் படிக்கும் போதே எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுங்கள். அதை நோக்கிய பயணத்திற்கான செயல்திட்டங்களை உருவாக்குங்கள்.
அத்துடன் நாளாந்தம் பத்து நிமிடமாவது பெற்றோர்களுடன் செலவழியுங்கள். அவர்கள் சொல்லும் விடயத்தை காது கொடுத்து கேளுங்கள்.
நீங்கள் நினைப்பதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். இது உங்களை ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் அழைத்துச் செல்லும்.” என்றார்.
இதனிடையே திருமணத்திற்குப் பிறகு.. இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பிறகு.. அறிவுரை சொல்ல தொடங்கியிருக்கும் நயன்தாராவை இணையவாசிகள், மூத்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவும் இணைந்து விட்டதை மீம்ஸ் மூலம் விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.