பல தசாப்தங்களாக தமிழ் திரையுலகில் மரபாக கடைபிடிக்கப்பட்டு வந்த கதாநாயகனுக்கான தோற்றம் குறித்த பிம்பத்தை ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் உடைத்து, கதாநாயகனுக்குரிய புதிய தோற்றப் பொலிவை உருவாக்கியவர் தனுஷ்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான நட்சத்திர நடிகராக வலம் வரும் தனுஷ், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து சர்வதேச திரை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.
அவருடைய திரையுலக பயணத்தில் அரை சதத்தை பூர்த்தி செய்யும் படத்தைப் பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் திரையுலகில் தனித்துவமான அடையாளத்துடன் உலா வரும் தனுஷின் ஐம்பதாவது படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை இயக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் ‘திருச்சிற்றம்பலம்’ எனும் படத்தினூடாக வணிக ரீதியான வெற்றியை அளித்த சன் பிக்சர்ஸ் – தனுஷ் கூட்டணி, இந்த புதிய படத்திலும் இணைந்திருப்பதால் மாபெரும் வெற்றியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.