சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘ ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ‘மில்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை தமன்னாவும் இணைந்திருக்கிறார் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ஜெயிலர்’.
இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால், கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்கள்.
மேலும் நடிகர்கள் வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுடன் ‘மில்கி பியூட்டி’ பொலிவுட் நடிகை தமன்னா இணைந்திருக்கிறார்.
விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14-ம் திகதி என்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகை தமன்னா 2019 ஆம் ஆண்டில் வெளியான ‘ஆக்சன்’ எனும் திரைப்படத்திற்கு பிறகு, மூன்று ஆண்டு இடைவெளி விட்டு, ‘ஜெயிலர்’ எனும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.