திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 317 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, தொடரை 3 – 0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்த வெற்றி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது.
விராத் கோஹ்லி குவித்த 46ஆவது சர்வதேச ஒருநாள் சதம், சுப்மான் கில் குவித்த 2ஆவது சர்வதேச ஒருநாள் சதம் ஆகியனவும் மொஹமத் ஷிராஜின் 4 விக்கெட் குவியலும் இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தின.
இந்தியா துடுப்பெடுத்தாடியபோது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அஷேன் பண்டாரவும் ஜெவ்றி வெண்டர்சேயும் ஒருவரோடு ஒருவர் கடுமையாக மோதுண்டதால் இருவரும் கடும் உபாதைக்குள்ளாகினர். இதனை அடுத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தூக்குப் படுக்கைகளில் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்கை அளிக்கப்பட்டது.
ஜெவ்றி வெண்டர்சேக்குப் பதிலாக துனித் வெல்லாலகே மாற்று வீரராக விளையாடினார். ஆனால், அஷேன் பண்டாரவுக்கு மாற்று வீரர் அனுமதிக்கப்படவில்லை. அஷேன் பண்டாரவுக்கு துடுப்பெடுத்தாட முடியாமல் போனதால் இலங்கை 9ஆவது விக்கெட்டை இழந்தவுடன் சகல விக்கெட்களையும் இழந்ததாக கருத்தில் கொள்ளப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 390 ஓட்டங்களைக் குவித்தது.
ரோஹித் ஷர்மா (42), ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 92 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பின்னர் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் இலங்கை பந்து வீச்சாளர்களை இஷ்டம் போல் பதம் பார்த்து 2ஆவது விக்கெட்டில் 112 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷுப்மான் கில் 97 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 116 ஓட்டங்களைக் குவித்து 2ஆவதாக ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் விராத் கோஹ்லி 3ஆவது விக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயருடன் மேலும் 108 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஐயர் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து கே. எல். ராகுல் (7), சூரியகுமார் யாதவ் (4) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுபக்கத்தில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 110 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 166 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைக்கு எதிராக விராத் கோஹ்லி குவித்த 10ஆவது ஒருநாள் சதம் இதுவாகும். அத்துடன் இந்தத் தொடரில் அவர் குவித்த 2ஆவது சதமாகும்.
இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மிகவும் கடினமான 391 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 22 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
12ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இலங்கை 50 ஓட்டங்களைப் பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவாறு 50 ஓட்டங்களைக் கடந்த இலங்கை 16ஆவது ஓவரில் 8ஆவது விக்கெட்டை இழக்க அதன் மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் கசுன் ராஜித்தவும் லஹிரு குமாரவும் 9 ஆவது விக்கெட்டில் அதிர்ஷ்டத்திற்கு மத்தியில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 73 ஓட்டங்களாக ஆக்கியபோது லஹிரு குமார 9 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டமிழந்தார்.
இந்த இணைப்பாட்டமே இலங்கையின் சிறந்த இணைப்பாட்;டமாக அமைந்தது. கசுன் ராஜித்த 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பாக நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 19 ஓட்டங்களைப் பெற்றார். தசுன் ஷானக்க 11 ஓட்டங்களைப் பெற இலங்கை சார்பாக மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் விராத் கோஹ்லி வென்றெடுத்தார்.