சிரியா நாட்டவர் ஒருவர் போருக்குத் தப்பி வெளியேறும் முயற்சியில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 7 மாதங்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவந்த ஹசன் அல் கோன்டர், சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து நாடற்றவரானார்.
அமீரகம் அவரது விசாவைப் புதுப்பிக்க மறுக்க, போர் நடக்கும் சிரியாவுக்குச் சென்று சிக்கிக்கொள்ள அவருக்கு மனமில்லை.
ஆகவே, சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருந்த ஹசன் 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வாழ்க்கையை ஆவணப்படுத்தல்
பின்னர் மலேசியா அவருக்கு மூன்று மாத விசா வழங்கியதால் அங்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து விசா காலம் முடிவடையவும், வேறெந்த நாடுகளுக்கும் செல்லமுடியாமல், சிரியாவுக்குச் செல்லவும் மனமில்லாமல் 7 மாதங்கள் விமான நிலையத்திலேயே வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையை ஆவணப்படுத்தியதுடன் சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மலேசிய அதிகாரிகள் ஹசனை கைது செய்து தடுப்புக் காவலில் அடைத்தார்கள்.
அவர் தடுப்புக்காவலில் கஷ்டங்கள் அனுபவித்து வந்த நிலையில், அவரது வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட கனேடியர்கள் சிலர் அவருக்காக அகதி நிலை கோரி விண்ணப்பித்துள்ளார்கள்.
கனடாவில் புகலிடம்
இதற்கமைய கனடா அவருக்கு புகலிடம் வழங்கியதுடன் நவம்பர் 2018இல், வான்கூவரை ஹசன் சென்றடைந்துள்ளார்.
அதற்கு முன் தன் தந்தையை இழந்த அவர், சிரியாவில் வாழ்ந்த தன் குடும்பத்தினர் எகிப்துக்கு குடிபெயர ஆவன செய்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று ஹசனுக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இனி கடவுசீட்டு ஒன்று கிடைத்ததும் தன் குடும்பத்தினரை சென்று காண விரும்புவதுடன் அவர்களையும் கனடாவுக்கு அழைத்துவர முயற்சி செய்யப்போவதாக கூறியுள்ளார்.
பல நாடுகள் அகதிகளை காவலில் அடைத்து கஷ்டப்படுத்தியபோது, கனடா மக்கள் அன்புடனும் மரியாதையுடனும் தன்னை ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியுடன் அறிக்கை செய்துள்ளார்.