பிரான்ஸில் நடைபெறவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு மகளிர் தகுதிகாண் முதலாம் சுற்று கால்பந்தாட்டத்தில் ஆசிய வலயத்திலிருந்து இலங்கை உட்பட 26 நாடுகள் பங்குபற்றவுள்ளன.
டி குழுவில் இலங்கையுடன் தாய்லாந்து, மொங்கோலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.
மகளிர் ஒலிம்பிக் தகுதிகாண் சுற்றுக்கான ஆசிய வலயத்திற்குரிய குழுநிலைப்படுத்தல் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்தாட்ட தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (12) காலை நடைபெற்றது.
ஆசிய வலய தகுதிகாண் சுற்று 7 குழுக்களில் நடைபெறவுள்ளது. 5 குழுக்களில் 4 அணிகள் வீதமும் 2 குழுக்களில் 3 அணிகள் வீதமும் போட்டியிடவுள்ளன. இந்த முதலாம் சுற்று தகுதிகாண் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
ஒவ்வொரு குழுவுக்குமான போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனம் (AFC) அறிவித்தது.
முதல் சுற்று போட்டிகள் ஏப்ரல் 3ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நிறைவுபெறும்.
இலங்கை அதன் முதலாவது போட்டியில் தாய்லாந்தையும் இரண்டாவது போட்டியில் மொங்கோலியாவையும் கடைசிப் போட்டியில் சிங்கப்பூரையும் எதிர்த்தாடும்.
பங்குபற்றும் அணிகள்
ஏ குழு: உஸ்பெகிஸ்தான், ஜோர்தான், திமோர்-லெஸ்டே, பூட்டான்.
பி குழு: மியன்மார், ஈரான், பங்களாதேஷ், மாலைதீவுகள்.
சி குழு: வியட்நாம், நேபாளம், பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான்.
டி குழு: தாய்லாந்து, மொங்கோலியா, சிங்கப்பூர், இலங்கை.
ஈ குழு: பிலிப்பைன்ஸ், ஹொங் கொங், தஜிகிஸ்தான், பாகிஸ்தான்.
எவ் குழு: சைனீஸ் தாய்ப்பே, இந்தோனேசியா, லெபனான்.
ஜீ. குழு: இந்தியா, கிர்கிஸ் குடியரசு, துர்க்மேனிஸ்தான்.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலாம் இடங்களைப் பெறும் 7 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும். ஆசிய மகளிர் கால்பந்தாட்டத்துக்கான தரவரிசையில் உயர் நிலையை வகிக்கும் வட கொரியா, ஜப்பான், டொக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 4ஆம் இடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா, சீனா, தென் கொரியா ஆகியன இரண்டாம் சுற்றில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெறும்.
இந்த 12 அணிகளும் 2ஆம் சுற்றில் தலா 4 அணிகள் வீதம் 3 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டியிடும். 2ஆம் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடங்களைப் பெறும் 3 அணிகளும் ஒட்டுமொத்த நிலையில் அதிசிறந்த 2ஆம் இடத்தைப் பெறும் அணியும் 3ஆம் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இந்த 4 அணிகளும் 2 ஜோடிகளாக சொந்த மண், அந்நிய மண் என்ற ரீதியில் ஒன்றையொன்று 2 தடவைகள் எதிர்த்தாடும். ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் வெற்றிபெறும் 2 ஆசிய மகளிர் அணிகள் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான மகளிர் கால்பந்தாட்டத்தில் பங்குபற்ற தகுதிபெறும்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கனடா தங்கப் பதக்கத்தையும் சுவீடன் வெள்ளிப் பதக்கத்தையும் ஐக்கிய அமெரிக்கா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன.