நடிகை சமந்தா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சாகுந்தலம்’ எனும் காவிய காதல் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சாகுந்தலம்’. இதில் நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நஹல்லா, பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
முக்கிய வேடத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா நடித்திருக்கிறார். சேகர் வி ஜோசப் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி ஷர்மா இசை அமைத்திருக்கிறார்.
காளிதாசர் எழுதிய புராண இதிகாச கதையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குணா டீம் ஒர்க்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் சமந்தாவின் தோற்றம், காட்சி அமைப்பு, கிறாபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.