எம்முடைய ஆதி பண்பாட்டின் தொடர்ச்சியாக நம் கண் முன் உயிர் சாட்சியாக நிற்கும் பனை மரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘நெடுமி’ எனும் பெயரில் தமிழ் திரைப்படமொன்று தயாராகிறது.
அறிமுக இயக்குநர் நந்தா லக்ஷ்மன் கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகனாக ப்ரதீப் செல்வராஜ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபிநயா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராஜசிம்மன், ஏ. ஆர். ராஜேஷ், ப்ரீத்தி ரமேஷ், வாசு, கிஷோர் மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்வா மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜோஸ் ஜே பி இசையமைத்திருக்கிறார்.
பனையேறிகளின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமான படைப்பாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஹரீஷ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம் வேல்முருகன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழகத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரமாக பனைமரத்தை நம்பியிருக்கிறார்கள். அரசின் கள் இறக்கத் தடை சட்டத்தால் இவர்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வலி அவர்களுக்குள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்த வலியைத் திரைப்படத்தில் பதிவு செய்யும் முயற்சி தான் இது.சொல்லத் தயங்கி சொல்ல மறந்த அந்த வலியை நான் ஒரு படமாக எடுத்துள்ளேன். திருப்தியாக வந்துள்ளதாக நம்புகிறேன்.” என்றார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் ‘நெடுமி’ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.