இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது , ‘சுரக்ஷித் ஜாயேன் பிராஷிக்ஷித் ஜாயேன் என்ற நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
மேலும் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்’- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.
வட இந்திய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் 17 வது பிரவாசி பாரதிய திவஸ் எனும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒன்றுகூடல் மாநாடு ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறுகிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடும் வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகத்தினரின் ஒன்றுகூடல் மற்றும் அவர்களுக்கான பிரத்யேக விருது வழங்கும் விழா இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறுகிறது.
ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி அன்று இந்த விழா திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இதன் பின்னணி- 1915 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை முறையில் பாடுபட்ட தேசப்பிதா மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய நாள் ஜனவரி 9. இதனை நினைவு கூறும் வகையில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிரவாசி பாரதிய திவஸ் எனும் விழா கொண்டாடப்படுகிறது.
பதினாறாவது பிரவாசி பாரதிய திவஸ் விழா, மெய்நிகர் பாணியில் ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 17 வது பிரவாசி பாரதிய திவஸ் விழா கொண்டாடப்படுகிறது.
17ஆவது பிரவாசி பாரதிய திவஸ் எனும் இந்நிகழ்வு , ‘அமிர்தமான தருணங்களில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான உண்மையான பங்காளிகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
இவ்விழாவின் இரண்டாம் நாளான (ஜனவரி 9ஆம் திகதி) நேற்று நடைபெற்ற விழாவில் சூரினாம் நாட்டின் அதிபரான ஷான் சந்தோக்கி அவர்களும், கயானா நாட்டு அதிபரான டொக்டர் முஹமத் இர்ஃபான் அலி அவர்களும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
முன்னதாக இங்கிலாந்து, கயானா, சுரினாம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த வெளிநாட்டு வாழ் இந்திய பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய மத்திய அமைச்சர்களையும் சந்தித்தனர். மேலும் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும் விவாதித்தனர்.
ஜனவரி 8, 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய அரசின் அனுசரணையுடன் கலாச்சார நடனங்களும், பாரம்பரிய நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றன..
இதன் போது உரையாற்றிய இந்திப் பிரதமர் நரேந்திர மோடி,
“நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரவாசி பாரதிய திவஸ் அதன் அனைத்து மகிமையிலும் நடைபெறுகிறது. தனிப்பட்ட தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் மகிழ்ச்சியையும் இது பறைசாற்றுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருக்கும் அனைவரையும் 130 கோடி இந்தியர்கள் சார்பாக வரவேற்கிறேன். இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் நர்மதையின் புனித நீர், பசுமை, பழங்குடியினருக்கு பெயர் பெற்ற மத்திய பிரதேசத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரவாசி பாரதிய திவஸ் பல்வேறு வழிகளில் சிறப்பு வாய்ந்தது. டிஜிட்டல் வடிவில் தொடங்கி இருக்கும் கண்காட்சி, புகழ் பெற்ற சகாப்தத்தை மீண்டும் கண் முன் கொண்டு வருகிறது.
அமிர்தா கால் எனப்படும் அமிர்தமான தருணத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய பார்வை மற்றும் உலகளாவிய பங்களிப்பு உங்களைப் போன்ற வெளிநாடு வாழ் இந்தியர்களால் வலுபெறும். மேலும் பலப்படுத்தப்படும்.
உலகம் முழுவதையும் சொந்த நாடாக கருதி மனித நேயத்தை நமது சகோதர சகோதரிகளாக கருதும் இந்திய தத்துவம், இந்தியாவின் கலாச்சார விரிவாக்கத்திற்கு நமது முன்னோர்கள் அடித்தளமிட்டனர்.
இந்தியர்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளுக்கு மத்தியில் வாழும் போது உலகின் அனைத்து பகுதிகளையும் கடந்து வந்துள்ளனர். வணிக கூட்டாண்மை மூலம் செழுமையின் கதவுகளை திறப்பதற்கான வழிகளை கண்டறிந்துள்ளனர். உலக வரைபடத்தில் கோடிக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களை காணும் போது, ‘ஒரே பாரதம் சிறந்த பாரதம்’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மிகவும் ஜனநாயகத்துடனும் அமைதியான மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக பேசப்படும் போது, ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமை பன்மடங்கு அதிகரிக்கிறது.
ஒவ்வொரு வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவின் ‘தேசிய தூதுவர்’ என அழைக்கிறேன் ஏனெனில் உலகம் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடும்போது, சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை அவர்கள் எதிரொலிக்கிறார்கள். நீங்கள் இந்தியாவின் பாரம்பரியம், மேக் இன் இந்தியா, யோகா மற்றும் ஆயுர்வேதம், இந்தியாவின் குடிசைத் தொழில்கள் மற்றும் கைவினை பொருட்களின் தேசிய தூதர்கள்.
அதே தருணத்தில் நீங்கள் இந்தியாவின் திணைகளின் வணிக தூதுவர்கள். ஏனெனில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச திணை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினை பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அனைவருக்கும் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்” என்றார்.
முக்கிய அம்சங்கள்
- விழா நினைவாக அஞ்சல் தலை வெளியீடு…’சுரக்ஷித் ஜாயேன் பிராஷிக்ஷித் ஜாயேன் ‘
- இந்திய சுதந்திர போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் வடிவிலான பிரவாசி பாரதிய திவஸ் கண்காட்சி. இதனை பிரதமர் நரேந்தர மோடி தொடங்கி வைத்தார். இதற்கு ‘ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
- இந்தூர் எனும் நகரம் அதன் பாரம்பரியத்தை பாதுகாத்துக் கொண்டு காலத்தை முன்னெடுத்தும் செல்லும் முக்கியமான கட்டத்தில் இவ்விழா இங்கு நடைபெறுகிறது.
- அமிர்தமான தருணம் என குறிப்பிடப்படும் இந்தியாவின் பயணத்தில் நமது பிரவாசி பாரதிய மக்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு.
- இந்தியாவின் தனித்துவமிக்க உலகளாவிய பார்வை மற்றும் அதன் உலகளாவிய பங்களிப்பில் இத்தகைய அமிர்தமான தருணத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் வலுப்படுத்தப்படுகிறது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ‘வசுதேவ குடும்பம்’ மற்றும் ‘ஒரே பாரதம் சிறந்த பாரதம்’ போன்ற எண்ணங்களை காண்கிறோம்.
- சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள்.
- ஜி 20 என்பது சாதாரண ராஜதந்திர நிகழ்வாக அல்லாமல் ‘அதிதி தேவோ பவ’ என்ற உணர்வை பெறக்கூடிய பொது பங்கேற்பின் வரலாற்று நிகழ்வாக மாற்றப்பட வேண்டும்.
- இந்திய இளைஞர்களின் திறமை அவர்களின் மதிப்புகள் மற்றும் பணி நெறிமுறைகள் ஆகியவை உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக மாறும்.
ஒன்பதாம் திகதியான நேற்று பிரவாசி பாரதீய திவஸ் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு…
- இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் தலைமையில், ‘புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் புலம்பெயர் இளைஞர்களின் பங்கு’ எனும் தலைப்பில் முதல் முழு கூட்டம் நடைபெற்றது.
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெளியுறவு துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் முன்னிலையில், ‘அமிர்தமான தருணத்தில் இந்திய சுகாதாரம் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு- விஷன் 2047’ என்ற தலைப்பில் முழு கூட்டம் நடைபெற்றது.
- வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி தலைமையில் ‘இந்தியாவின் மென்மையான சக்தியை மேம்படுத்துதல், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் படைப்பாற்றல் மூலம் நல்லெண்ணம்’ ஆகிய தலைப்பில் முழு கூட்டம் நடைபெற்றது.
” இதனைத் தொடர்ந்து கல்வி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான தலைமையில் ‘இந்திய பணியாளர்களின் உலகளாவிய இயக்கத்தை செயல்படுத்துதல்- புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கு’ என்ற தலைப்பில் முழு கூட்டம் நடைபெற்றது.
- நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் தேசத்தை கட்டி எழுப்புவதற்கான உள்ளடக்கத்துடன் கூடிய அணுகுமுறையை நோக்கி புலம்பெயர்ந்த தொழில் முனைவோரின் திறனை பயன்படுத்துதல் என்ற தலைப்பில் முழு கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அனைத்துக் கூட்டத்திலும் திறமை வாய்ந்த நிபுணர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு பற்றி சிறப்பித்தனர்.
இதனிடையே பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு என்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மையான நிகழ்வாகும். இது வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும் முக்கியமான தளமாக திகழ்கிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘இந்தியாவின் முன்னேற்றத்திற்கான நம்பகமான பங்காளிகள் ’என்பதாகும் ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3500 க்கும் மேற்பட்ட புலம் பெயர் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் தங்களது வருகையை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.