உலக பொதுமறையான திருக்குறளிலிருந்து நூறு குறள்களை எடுத்து, அவற்றை தனக்கே உரித்தான பாணியில் பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில், அசல் மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற சிறப்புமிக்க தருணத்துடன் ஒப்பிட்டு நடிகர் சிவகுமார், ‘திருக்குறள் 100’ என ஆன்மிக இலக்கிய சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கிறார். ஈரோடு புத்தக திருவிழாவில் நிகழ்த்திய இந்த உரை, பொங்கல் திருவிழா விடுமுறை தினத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தமிழ் திரையுலகில் திறமையான நடிப்பை தவிர்த்து, ஏனைய தனித்திறன்களால் மெத்த படித்தவர்களை மட்டுமல்லாமல், பாமர மக்களையும் ஆச்சரியப்படுத்தி வருபவர் நடிகர் சிவக்குமார்.
நடிகர், ஓவியர், இலக்கிய சொற்பொழிவாளர் என தன்னுடைய திறமைக்கான எல்லைகளை விரிவடையச் செய்துகொண்டே இந்த 75 வயதிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் இவர், புதிய முயற்சியாக திருக்குறளை கையிலெடுத்திருக்கிறார்.
திரைத்துறையிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றுக் கொண்ட இவர், இலக்கியத்துறையின் மீது கவனத்தை செலுத்தி சொற்பொழிவாளராக வலம் வருகிறார். இவரது உரையில் கம்பராமாயணம், மகாபாரதம் ஆகியவை எளிமையாக தொகுக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டது.
எந்தவித குறிப்புகளும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் முன்னிலையில் உரை நிகழ்த்துவது இவரது பாணி.
மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது நூறு குறள்களை தெரிவுசெய்து, அதனை ‘திருக்குறள் 100’ எனும் பெயரில் உரையாற்றியிருக்கிறார்.
‘சங்கர சரவணன் எனும் தமிழ் ஆய்வாளரை உடன் வைத்துக்கொண்டு மூன்றரை ஆண்டு கால உழைப்பில் இந்த திருக்குறள் நூறை உருவாக்கியதாக சிவக்குமார் குறிப்பிடுகிறார்.
அவரது உரையில் பல திருக்குறள்கள் உணர்த்தும் பொருள், துல்லியமாக ஒப்பிடப்படவில்லை என்றாலும், அவரது இந்த முயற்சி, தமிழறிஞர் வட்டாரத்தில் பாராட்டை பெற்றிருக்கிறது.
சுய ஒழுக்கம் கொண்ட நடிகர் எனும் அடையாளம், நூல்களை வாசித்து, அதனை தனக்கே உரிய பாணியில் சுருக்கி பயன்படுத்தும் பாணி, குறிப்பு இல்லாமல் ஒரே தருணத்தில் நீண்ட உரையாற்றும் இவரது அணுகுமுறை ஆகியவை குறித்தும் பலர் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய முயற்சி குறித்து அவர் பேசுகையில், ”நடிகர் என்ற அடையாளத்தை விட, ஓவியர், சொற்பொழிவாளர் போன்ற மன நிறைவான விடயங்களை ஈடுபாட்டுடன் செய்வதால், இவையே எதிர்காலத்தில் மக்களிடையே என்னை பற்றிய இருப்பை உணர வைக்கும்.
மேலும், தற்காலத்தில் இளைய தலைமுறையினர் வாசிப்பை குறைத்துக்கொண்டதால் இத்தகைய முயற்சிகளில் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
திருக்குறளுக்கு இதுவரை பலர் பொழிப்புரை, பதவுரை, பொருளுரை என பல வகையினதான உரைகள் எழுதப்பட்டிருந்தாலும், சிவக்குமாரின் சொற்பொழிவு…. அதிலும் எம்முடன் வாழ்ந்த மனிதர்களின் உதாரணத்துடன் கூடிய எடுத்துக்காட்டு உரை, எதிர்காலத்தில் இலக்கிய வடிவமாக உருவெடுக்கும் என தமிழறிஞர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள்.