இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த ரீ. சுதாகருக்கு ஓரே இரவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மற்றொருவரின் பெயரை வேட்பு மனு பட்டியலில் தேர்தல் குழு சேர்த்தமை வியப்பை தோற்றுவித்துள்ளதாக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நியதியிலிருந்த 1,277,500,000 ரூபாவுக்கு என்ன நேர்ந்தது என்ற தலைப்பில் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பின்போது இதனைக் குறிப்பிட்ட அநுர டி சில்வா, ஓய்வுநிலை நீதிபதி தலைமையிலான தேர்தல் குழு பக்கசார்பாக செயற்படுகின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அநுர டி சில்வா, ‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலை முன்னிட்டு கடந்த டிசம்பர் 20ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பிரகாரம் பொருளாளர் பதவிக்கு சில வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நவம்பர் 21ஆம் திகதி ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நவம்பர் 22ஆம் திகதி தேர்தல் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்படாத வேட்பு மனுக்கள் அடங்கிய பட்டியல் வெளியிடபட்டது.
‘அதற்கு அமைய பொருளாளர் பதவிக்கு ரி. சுதாகரின் வேட்பு மனு மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஓய்வுநிலை நீதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையிலான மூவரடங்கிய தேர்தல் குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட வேட்பு மனு பட்டியலில் காணப்பட்டது. அதன்படி ரீ. சுதாகர் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், 24 மணித்தியாலம் கழித்து பொருளாளர் பதவிக்கு மற்றொரு வேட்பாளரின் பெயரை சேர்த்து புதிதாக ஒரு வேட்பு மனு பட்டியலை தேர்தல் குழு வெளியிட்டது. இது தேர்தல் குழுவின் நேர்மைத்துவத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகிறது’ என அநுர டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சரினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளில் ஒரு விதியை ஏற்றுக்கொண்ட தேர்தல் குழுவின் கண்களுக்கு மற்றொரு விதி புலப்படாதது விசித்திரமாக இருப்பதாக அநுர டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
‘புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்களில் நிருவாக உத்தியோகத்தர் பதவிகளை வகிக்க முடியாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதியை ஏற்றுக்கொண்ட ஓய்வுநிலை நீதிபதி கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் தலைமையிலான தேர்தல் குழு, உப்பாலி ஹேவகே, கே.பி.பி. பத்திரண ஆகிய இருவரினதும் வேட்பு மனுக்களை நிராகரித்தது. ஆனால், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் பரிந்துரைக்கப்பட்ட விதியை தேர்தல் குழு கண்டுகொள்ளாமல் தலைவர் பதவிக்கான யூ. எல். ஜஸ்வரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது வியப்பைத் தருகிறது’ என அனுர டி சில்வா சுட்டிக்காட்டினார்.
‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2014/15 வருடத்திற்கான கணக்காய்வு அறிக்கையின் வினவல் தொடர்பான எழுத்துமூல ஆவணத்தை நிறைவேற்றுக் குழுவின் அனுமதியின்றி அப்போது செயலாளர்நாயகமாக பதவி வகித்த யூ. எல். ஜஸ்வர் கோப் குழுவிடம் 2017இல் சமர்ப்பித்திருந்தார்.
‘இது தொடர்பான அறிக்கை ஒன்றை விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கோப் குழுவினர் சமர்ப்பித்திருந்தனர். இதனை அடுத்து விசாரணை நடத்திய விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக பொறுப்பபற்ற முறையில் செயற்பட்ட அவர் (யூ. எல். ஜஸ்வர்) எந்தவொரு விளையாட்டுத்துறை சம்மேளனத்திலும் எந்தவொரு பதவியையும் வகிப்பது பொருத்தமானதல்ல என பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ. ஜே. எம். பொன்சேகா தனது கையொப்பத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளருக்கு முகவரியிட்டு 2021 ஆகஸ்ட் 18ஆம் திகதி அனுப்பிவைத்திருந்தார்’ என அநுர டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
‘புதிதாக வெளியிடப்பட்ட விளையாட்டுத்துறை சட்ட விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களில் பதவி வகிக்க முடியாது எனவும், அங்கீகரிக்கப்பட்ட குழுவினால் எவரேனும் பதவி வகிக்க பொருதமற்றவர் என பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு பரிந்துரையை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் குழு, மற்றைய பரிந்துரையை கவனத்தில் கொள்ளாதது அக் குழுவின் நேர்மைத்துவத்தை சந்தேகம் கொள்ளச் செய்கிறது’ என அனுர டி சில்வா கூறினார்.
அத்துடன்,இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 1,227,500,000 ரூபாவுக்கு என்ன நேர்ந்தது என கேள்வி எழுப்பிய அநுர டி சில்வா, பீபா உலகக் கிண்ண டிக்கெட்களுக்கு செலிடப்பட்ட சம்மேளனத்தின் 160 இலட்சம் ரூபாவில் பெரும்பகுதி மீள செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
‘சம்மேளனத்தின் தலைவராக இருந்த யூ எல். ஜஸ்வர், நிதிக் குழுத் தலைவராகவும் இருந்த காலத்திலேயே இவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் 2021 தேர்தலுக்கு முன்னர் ஜஸ்வர் வழங்கிய எந்தவொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அனுர டி சில்வா, சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி மாத்திரமே கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டதாகவும் முதலாம் பிரிவு, இரண்டாம் பிரிவு, எவ். ஏ. கிண்ணம் ஆகிய கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படாததால் வீரர்களும் கழகங்களும் கால்பந்தாட்டத்தில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந் நிலையில் சில பதவிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் தேர்தல் குழு இறுதி வேட்பு மனு பட்டியலை திங்கட்கிழமை (09) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.