டேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸுடன் 2 தசாப்தங்களாக தொடர்ச்சியாக கைகோர்த்து செயற்பட்டுவரும் வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA) 20ஆவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள DPGC சவால் கிண்ண MCA E பிரிவு லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
டேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸின் பூரண அனுசரணையுடன் ஈ பிரிவு 25 ஓவர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருதுடன் அதனைத் தொடர்ந்து நொக் அவுட் சுற்று ஆரம்பமாகவுள்ளது.
17 அணிகள் 3 குழுக்களில் விளையாடி வருகின்றன.
ஏ குழுவில் அமானா டக்காபுல், அபான்ஸ் குறூப், ஸ்டபர்ட் மோட்டர்ஸ், அலியான்ஸ் இன்சூரன்ஸ், அக்பர் பிரதர்ஸ், HSBC ‘ஏ’ ஆகிய அணிகளும்
பி குழுவில் எமர் ஃபார்மா, செலின்கோ இன்சூரன்ஸ், டீஜே லங்கா, SSK ஹோல்டிங்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ், ஜோன் கீல்ஸ் குறூப் ‘பி’ ஆகிய அணிகளும்
சி குழுவில் ப்றண்டிக்ஸ் எசென்ஷல்ஸ் ‘ஏ’, வேர்ச்சுசா (பிறைவேட்) லிமிட்டெட், பிஸ்ஸா ஹட், LOLC, ஹேலீஸ் குறூப் ‘பி’ ஆகிய அணிகளும் போட்டியிடுகின்றன.
கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான 40 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்று எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவடையும். அதனைத் தொடர்ந்து நொக் அவுட் சுற்று ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமாகும்.
லீக் சுற்றில் பிரகாசிக்கும் 16 அணிகள் முன்னோடி கால் இறுதியில் விளையாட தகுதிபெறும். முன்னோடி கால் இறுதிகள் ஜனவரி 21, 22ஆம் திகதிகளிலும் கால் இறுதிகள் ஜனவரி 28, 29ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 5ஆம் திகதியும் இறுதிப் போட்டி பெப்ரவரி 11ஆம் திகதியும்.
லீக் சுற்றில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர், அதிசிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன் ஆகிய விருதுகளும் நொக் அவுட் சுற்றில் இறுதி ஆட்ட நாயகன் விருதும் டேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸினால் வழங்கப்படும்.
இப் போட்டிக்கான பூரண அனுசரணையை ஏற்றுள்ள டேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸ் சார்பாக டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி பிறைவேட் லிமிட்டெடின் குழும கூட்டாண்மை தொடர்பாடல்கள் பணிப்பாளர் ரமணி பராக்ரம, அனுசரணைக்குரிய மாதிரி ஆவணத்தை வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் நலின் விக்ரமசிங்கவிடம் MCA பிச் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வழங்கினார்.
இந்த நிகழ்வில் வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் மற்றும் அனுசரணைக் குழுத் தலைவர் ரொஹான் சோமவன்ச, பொதுச் செயலாளர் தரிந்த்ர களுப்பெரும, டேவீட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் அதிகாரி நதி தர்மசிறி, அசெட்லைன் பினான்ஸ் லிமிட்டெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அஜன்த ப்ரேமசிறி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.