அஜித் குமார் நடிப்பில் தயாராகி வெளியாக இருக்கும் ‘துணிவு’ படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘துணிவு’. இதில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் ஏற்கனவே ஜனவரி மாதம் 12ஆம் திகதி என்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒருநாள் முன்னதாக ஜனவரி மாதம் 11-ம் திகதி புதன்கிழமையன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்
இதனிடையே அஜித்குமார் நடிப்பில் தயாராகி, டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அன்று வெளியான ‘துணிவு’ திரைப்படத்தின் முன்னோட்டம் இதுவரை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
