தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொம்மை நாயகி’ எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை சுபத்ரா, ‘மெட்ராஸ்’ ஹரி கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். தந்தை- மகள் இடையேயான உறவை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார். விக்னேஷ் சுந்தரேசன், வேலன், லெமுவேல் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் மூன்றாம் திகதியன்று ‘பொம்மை நாயகி’ உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகிறது.
இதனிடையே கடந்த ஆண்டில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது.
தேசிய விருதுநையும் வென்றது. இதன் காரணமாக யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மையின் நாயகி’ எனும் இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.