டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் உஸ்மான் கவாஜா தனது அதிகபட்ச எண்ணிக்கையை பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித் 30ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கான சேர் டொனல்ட் ப்றட்மினின் சாதனையைப் புதுப்பித்தார்.
இதன் பலனாக தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்துள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (05) ஆட்டம் மழை காரணமாக முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 475 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கவாஜா 195 ஓட்டங்களுடனும் மெட் ரென்ஷோ 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பெரும்பாலும் நாளைய தினமும் அவுஸ்திரேலியா தொடர்ந்து துடுப்பெடுத்தாடி கவாஜாவுக்கு இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ய அவகாசம் வழங்கி அதன் பின்னர் இன்னிங்ஸை டிக்ளயார் செய்யும் என கருதப்படுகிறது.
முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாகவும் போதிய வெளிச்சம் இன்மை காரணமாகவும் 47 ஓவர்களுடன் நிறுத்தப்பட அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதலாம் நாள் ஆட்டத்தில் கவாஜா 33ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது கவாஜா 4,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா சார்பாக கவாஜாவும் ஸ்மித்தும் சதங்கள் குவித்தனர். அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 209 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட்டுடன் மேலும் 112 ஓட்டங்களை 4ஆவது விக்கெட்டில் கவாஜா பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.
தனது 56ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கவாஜா, 13ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றமை விசேட அம்சமாகும். இதற்கு முன்னர் அவரது அதிகபட்ச இன்னிங்ஸ் எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தது. நியூஸிலாந்துக்கு எதிராக 2015இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே அவர் முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றிருந்தார்.
கவாஜா 368 பந்துகளை எதிர்கொண்டு 19 புவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசியிருந்தார்.
இதேவேளை, ஸ்டீவன் ஸ்மித் தனது 92ஆவது டெஸ்ட் போட்டியில் 30ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த சதத்துடன் சேர் டொனல்ட் ப்றட்மனின் 29 டெஸ்ட் சதங்களை ஸ்டீவன் ஸ்மித் கடந்து அவுஸ்திரேலியாவுக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார்.
அவர்களை விட மார்னுஸ் லபுஸ்சான் 79 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.