பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தி நியூஸிலாந்தை பலப்படுத்திய மெட் ஹென்றி, அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.
பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக் மீண்டும் பிரகாசித்து அரைச் சதம் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 449 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் போட்டியின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 449 ஓட்டங்களைப் பெற்றது.
இன்றைய ஆட்டத்தின் முதலாவது பகுதியில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன் பின்னர் 10ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கடைநிலை ஆட்டக்காரர்களான மெட் ஹென்றியும் அஜாஸ் பட்டேலும் பெறுமதிமிக்க 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தைப் பலப்படுத்தினர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெட் ஹென்றி 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் 7 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற 66 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.
அஜாஸ் பட்டேல் பெற்ற 35 ஓட்டங்கள் அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக அமைந்தது.
முதலாம் நாள் ஆட்டத்தில் டெவன் கொன்வே 122 ஓட்டங்களையும் டொம் லெதம் 71 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 51 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அகா சல்மான் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முதலாவது டெஸ்டில் போன்றே மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் இமாம் உல் ஹக் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பாபர் அஸாம் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 24 ஒட்டங்களுடன் வெளியேறினார்.
பாகிஸ்தானின் 3ஆவது வீக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது. எனினும் இமாம் உல் ஹக், சவூத் ஷக்கீல் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.
பந்துவிச்சில் அஜாஸ் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மெட் ஹென்றி 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.