அமெரிக்காவில் உறைய வைத்த கடும் பனிப்பொழிவை தொடர்ந்து கடும்மழை, முக்கிய நகரங்களை புரட்டி போட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பனிப்புயல் வீசியதால், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து அவதிக்குள்ளாகினர்.
அந்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் உறைபனியால் உறைந்து போயின. வீதிகள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து கிடந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் வீதிககளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய்யுள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கலிபோர்னியா நகரம், கடும்மழையை சந்தித்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பனிப்புயல், கடும்மழை என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.