கோடிக்கணக்கில் பணம் புரளச் செய்யும் இண்டியன் பிறீமியர் லீக்கின் 16 அத்தியாயத்திற்கான ஏலத்தில் எடுக்கப்படவுள்ள 405 வீரர்களில் இலங்கை வீரர்கள் 10 பேர் உட்பட உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களும் இடம்பெறுகின்றனர். வீரர்களுக்கான ஏலம் கொச்சியில் வியாழக்கிழமை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தலைசிறந்த வீரர்களுடன் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த வீரர்களும் எல்பிஎல் அணிகளின் முகாமைத்துவத்தினரால் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர்.
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள ஏலத்தின்போது இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸை பல அணிகள் தமது அணிக்குள் ஈர்த்துக்கொள்ள முயற்சிக்கும் என்பதால் ஏலம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் 10 வீரர்கள் இலங்கைக்கான குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர். இலங்கை வீரர்களுக்கான ஏல அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவிலிருந்து ஆரம்பிக்கும்.
குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவுள்ள இலங்கை வீரர்களாவர்.
வனிந்து ஹசரங்க டி சில்வா (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்), மஹீஷ தீக்ஷன (சென்னை சுப்பர் கிங்ஸ்), பானுக்க ராஜபக்ஷ), மதீஷ பத்திரண (சென்னை சுப்பர் கிங்ஸ்) ஆகியோர் தக்கவைக்கப்பட்ட இலங்கை வீரர்களாவர்.
வெளிநாட்டு அதிரடி ஆட்ட சகலதுறை வீரர்கள்
பென் ஸ்டோக்ஸ் உட்பட இன்னும் சில அதிரடி ஆட்ட சகலதுறை வீரர்கள் பெருந்தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் கெமரன் க்றீன், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஹெரி ப்றூக், மேற்கிந்தியத் தீவுகளின் நிக்கலஸ் பூரன் ஆகியோரும் ஐபிஎல் அணிகளால் ஏலத்தில் குறிவைக்கப்படவுள்ள சகலதுறை ஆட்டக்காரர்களாவர்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது அத்தியாயத்திற்கு முன்பதாக ஐபிஎல் இல் பங்குபற்றும் 10 அணிகளும் போட்டி போட்டு அதிசிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து தத்தமது குழாம்களை அமைக்கவுள்ளன. இதன் காரணமாக இந்த ஒருநாள் மினி ஏலத்தில் 30 அதிசிறந்த வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான ரூபாவுக்கு எடுக்கப்படுவர் என கருதப்படுகிறது.
இவர்களைவிட இந்தியாவின் அமித் மிஷ்ரா (40 வயது), ஆப்கானிஸ்தானின் மொஹம்மத் நபி (37 வயது), தென் ஆபிரிக்கா வீரர்களான டேவிட் வைஸ் (37 வயது) மற்றும் ரைலி ரூசோ (36 வயது), பங்களாதேஷின் ஷக்கிப் அல் ஹசன் (36 வயது), ஸிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா (36 வயது) ஆகிய சில முதிய வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபற்றுகின்றன.