கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (18) பிற்பகல் நடைபெற்ற எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தின் 19ஆவது போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜெவ்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் ரஹ்மானுல்லா குவித்த அரைச் சதமும் ஜெவ்னா கிங்ஸின் வெற்றிக்கு அடிகோலின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்டார்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் 4 ஓவர்களுக்குள் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கலம்போ ஸ்டார்ஸ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், டொமினிக் ட்ரேக்ஸ் (38), நிஷான் மதுஷ்க (35), ரவி போப்பரா (20) ஆகிய மூவரும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி கலம்போ ஸ்டார்ஸ் அணியை சுமாரான நல்ல நிலையில் இட்டனர்.
ஜெவ்னா கிங்ஸ் பந்துவீச்சில் ஷொயெப் மாலிக் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திசர பெரேரா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
129 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 40 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 69 ஓட்டங்களைக் குவித்ததுடன் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 71 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து அவிஷ்கவும் சதீர சமரவிக்ரமவும் (9 ஆ.இ.) பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.