ஆர்ஜென்டீனாவுக்காக தொடர்ந்தும் தான் விளையாடவுள்ளதாக, உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி தெரிவித்துள்ளார்.
கத்தார் 2022 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டி என இப்போட்டிக்கு முன்னர், 35 வயதான மெஸி தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் தொடர்ந்தும் சர்வதேச போட்டியில் விளையாடுவாரா என கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸுடனான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய லய
னல் மெஸி, சுற்றுப்போட்டியின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.
அதன்பின் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லியோ மெஸி,
‘இத்துடன் எனது தொழிற்சார் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினேன். இதைவிட வேறு எதையும் என்னால் கேட்முடியாது. இறைவனுக்கு நன்றி, அவர் அனைத்தையும் எனக்கு கொடுத்துள்ளார். இது போன்று எனது தொழிற்சார் வாழ்க்கையை நிறைவு செய்வது அற்புதமானது.
இதற்குப் பின் வேறு என்ன இருக்கிறது? கோபா அமெரிக்கா, உலகக் கிண்ணத்தை என்னால் வெல்ல முடிந்துள்ளது. ஏறத்தாழ கடைசியில் தான் அது எனக்கு கிடைத்துள்ளது.
தேசிய அணியில், இந்த குழுவில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலக சம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்’ என்றார்.
‘ஒவ்வொரு சிறு பிள்ளையினதும் கனவாக இது (உலகக் கிண்ணம்) உள்ளது. நான் தவறவிட்ட அனைத்தையும் இங்கு அடைவதற்கு எனது அதிஷ்டம் கிடைத்துள்ளது’ எனவும் மெஸி கூறினார்.