இலங்கையில் இளையோரை உயரிய நிலைக்கு இட்டுச் சென்று ஆசிய மட்டத்தில் பதக்கங்கள் வெல்லக்கூடியவர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் பிரிமா சன்ரைசஸ் ப்றெட் அனுசரணையில் இலங்கை கனிஷ்ட கோல்வ் போட்டி 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கோல்வ் ஒன்றியத்தின் கனிஷ்ட கோல்வ் அபிவிருத்தி குழு நடத்தும் இந்த வருடத்திற்கான இலங்கை கனிஷ்ட கோல்வ் போட்டி றோயல் கோல்வ் புற்தரையில் எதிர்வரும் 22ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் இருபாலாரிலும் கனிஷ்ட கோல் சம்பியன்கள் தீர்மானிக்கப்படுவர்.
மெய்வல்லுநர் போட்டியை விட ஆசிய மட்டத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்றவர்களை உருவாக்கிய பெருமை இலங்கை கோல்வ் ஒன்றியத்தை (ஸ்ரீலங்கா கோல்வ்) சாருகிறது.
நந்தசேன பேரேரா, அநுர ரோஹன ஆகிய கோல்வ் வீரர்கள் இலங்கைக்கு ஆசிய பதக்கங்களை வென்றுகொடுத்தவர்கள் ஆவர்.
அவர்களைப் போன்று எதிர்காலத்தில் கோல்வ் விளையாட்டில் இலங்கைக்கு பதக்கங்களை வென்றுகொடுக்கக்கூடியவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரிமா சன்ரைஸ் ப்றெட் கிண்ணத்திற்கான இலங்கை கனிஷ்ட கோல்வ் போட்டியை நான்கு வயது பிரிவுகளில் நடத்துவதாக இலங்கை கோல்வ் கனிஷ்ட உப பிரிவுத் தலைவி நிலூ ஜயதிலக்க தெரிவித்தார்.
இப் போட்டியில் வெற்றி பெறும் வீர, வீராங்கனைகளை சர்வதேச கோல்வ் போட்டிகளில் பங்குபற்றச் செய்யும் பொருட்டு 16 வயதுக்குட்பட்ட குழாம் அமைக்கப்பட்டு விசேட பயிற்சி அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தங்கப் பிரிவிலும் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் வெள்ளிப் பிரிவிலும் 10 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் வெண்கலப் பிரிவிலும் 9 வயது மற்றும் 9 வயதுக்குட்பட்டவர்கள் செப்புப் பிரிவிலும் பங்குபற்றவுள்ளனர்.
அண்மைக் காலத்தில் கனிஷ்ட கோல்வ் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதை போட்டியில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகிறது. இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 100 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கனிஷ்ட சம்பியன்களான யனிக் குமார (ஆண்கள்), காயா தலுவத்த (பெண்கள்) ஆகிய இருவரும் இந்த வருடம் சம்பியன் பட்டங்களைத் தக்கவைக்க கடுமையாக முயற்சிக்வேண்டிவரும். ஏனேனில் கோல்வ் விளையாட்டில் முன்னேறிவரும் கே. தனுஷன், நிரேக் டெக்வானி, வினுது வீரசிங்க, சன்கநாத் ஹேசர, ஷெரின் பாலசூரிய ஆகியோர் தங்கப் பிரிவில் பங்குபற்றும் அனுபவசாலிகளாளர்.
மற்றைய பிரிவுகளில் ரதிஸ் காந்த் சகோதரர்களான தேஜாஸ் மற்றும் யுவன், ரேஷான் அல்கம, ஜெக்கப் நோர்ட்டன் ஆகியோர் சம்பியன் பட்டங்களை வென்றெடுக்க முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப் போட்டிக்கு அனுசரணை வழங்கிவரும் பிரிமா குழுமம் சார்பாக கருத்து வெளியிட்ட குழுமத்தின் பொது முகாமையாளர் லோரன்ஸ் சான், ‘இலங்கையில் மிக நீண்டகாலமாக கனிஷ்ட கோல்வ் விளையாட்டிற்கு அனுசரணை வழங்கிவருதையிட்டு எமது நிறுவனம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. வளர்ந்துவரும் இளம் கோல்வ் வீர, வீராங்கனைகளுக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதால் அவர்களிடமிருந்து சிறப்பான, உயரிய கோல்வ் விளையாட்டை எதிர்பார்க்கிறோம். இப் போட்டியை முன்னின்று நடத்தும் இலங்கை கோல்வ் ஒன்றியத்தைப் பாராட்டுவதுடன் கோல்வ் விளையாட்டை மென்மேலும் ஊக்குவிக்க எமது ஆதரவு தொடரும்’ என்றார்.