வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் குடியகல்வு சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் நெருக்கடிக்குள்ளானவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து முறையாக வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்கள், அங்கு ஏதேனும் நெருக்கடிக்குள்ளானால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு உரிய தூதரகங்களுக்கு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு சென்றால் மாத்திரமே தூதரகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
முறையாக வெளிநாடு சென்றவர்கள் அங்கு ஏதேனும் பாதிப்புகள் எதிர்கொள்ளும் போது அவர்கள் தூதரகத்தின் பாதுகாப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவார்கள்.
முறையற்ற வகையில் செல்பவர்களை தூதரகம் பொறுப்பேற்காது. இவ்வாறு முறையற்ற வகையில் சென்றவர்கள் பின்னர் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,குடியகல்வு சட்டத்திற்கு முரணாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் 99 சதவீதமானோர் தாம் செய்வது தவறு,சட்டத்திற்கு முரணாக செயற்படுகிறோம் என்பதை நன்கு அறிவார்கள்.
இவ்வாறானவர்கள் தான் தற்போது வெளிநாடுகளில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்,முறையற்ற வகையில் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முறையற்ற வகையில் வெளிநாடு சென்று அங்கு நெருக்கடிக்குள்ளானவர்கள் முன்வைக்கும் ஒரு சில கருத்துக்கள் இராஜதந்திர மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலை தொடர்ந்தால் முறையான வழி முறையில் கூட இலங்கையர்கள் ஒரு சில நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றார்.