ரஷ்ய படைகள் வெளியேறிய கெர்சான் நகரில் ஒரே இடத்தில் 63 சடலங்களை யுக்ரைன் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
அனைத்து உடல்களிலுமே சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
யுக்ரைன் மீது ரஷ்யா போர் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் யுக்ரைனின் கிழக்கு கெர்சான் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.
இதையடுத்து அங்கு உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக உக்ரைன் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
இந்த ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் கடுமையான சித்திரவதை காயங்களுடன் 63 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். விசாரணை ஆரம்பிக்கப்பட்ட உடனேயே ஒரு இடத்தில் 63 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்னும் எவ்வளவோ இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது என்கிறார் யுக்ரைனின் உள் விவகாரத்துறை அமைச்சர் டெனைஸ் மொனாஸ்ட்ரைஸ்கி.
கெர்சான் நகரம் ரஷ்யாவின் பிடியில் இருந்த போது ஏராளமான போர்க் குற்றங்களும், சர்வதேச போர் விதி மீறல்களும் அரங்கேறியுள்ளதாகவும் மொனாஸ்ட்ரைஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் மீது எலக்ட்ரிக் ஷாக் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதும், ரப்பர் மற்றும் பிளாஷ்டிக் குச்சியால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும் செயற்கை மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக யுக்ரைன் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என சர்வதேச விசாரணை அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. பொதுமக்களை பிடித்து சித்தரவதை செய்து கொன்றதாக உக்ரைன் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
யுக்ரைன் மீதான தாக்குதலை ஆரம்பித்தவுடன் முதன் முதலில் ரஷ்யா கைப்பற்றியது கெர்சனைத் தான் அந்தப்பகுதியில் இருந்து கடந்த வாரம் ரஷ்யப் படைகள் வெளியேறியது. இதையடுத்து தொலைக்காட்சியில் உரையாற்றிய யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கெர்சான் பகுதியில் மட்டும் நானூறுக்குமு் அதிகமாக போர்க்குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சர்வதேச விசாரணை அதிகாரிகளுடன் யுக்ரைன் அதிகாரிகள் கெர்சான் பகுதியில் தற்போது விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்னும் போர் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் ரஷ்யா மீது யுக்ரைன் போர் விதி மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறது.