சிட்னி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (22) நடைபெற்ற நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய நியூஸிலாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8 ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது.
குழு 1 க்கான சுப்பர் 12 சுற்றின் இந்த ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 111 ஓட்டங்களுக்கு சுருண்டு 89 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

பின் அலன், டெவன் கொவன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், டிம் சௌதீயின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு, அணியின் மிகத் திறமையான களத்தடுப்பு என்பன நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடைய வைத்தன.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 11 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.
நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 2ஆவது ஓவரில் டிம் சௌதீ விசிய முதலாவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த டேவிட் வோர்னர் (5) துரதிர்ஷ்டவசமாக போல்ட் ஆனார். அவர் அடித்த பந்து அவரது தொடையில் பட்டு மேலெழுந்தபோது பந்து மீண்டும் துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம்பார்த்தது. (5-1 விக்.)

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது மிச்செல் சென்ட்னரின் பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் இலகுவான பிடிகொடுத்த அணித் தலைவர் ஆரொன் பின்ச் (13) வெளியேறினார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. கடந்த வருட இறுதி ஆட்டநாயகன் மிச்செல் மார்ஷ் (16), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (7), டிம் டேவிட் (11), மெத்யூ வேட் (2), க்லென் மெக்ஸ்வெல் (28), மிச்செல் ஸ்டார்க் (4), அடம் ஸம்ப்பா (0), பெட் கமின்ஸ் (21) ஆகிய அனைவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியபோது மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் பிடியை க்லென் பிலிப்ஸ் எடுத்த விதம் அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த கோடிக்கணக்கான இரசிகர்களையும் பிரமிக்க வைத்தது.
ஸ்டொய்னிஸ் உயர்த்தி அடித்த பந்தை நோக்கி வலப்புறமாக சுமார் 25 யார் தூரம் ஓடிய பிலிப்ஸ், சுமார் 3 அடி தாவி பந்தை பிடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் 2.1 ஓவர்களை மாத்திரம் வீசிய டிம் சௌதீ 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 4 ஓவர்களில் 31 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களான பின் அலன், டெவன் கொன்வே ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 25 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பின் அலன் 16 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் சிரேஷ்ட வீரர் மார்ட்டின் கப்டிலுக்கு பதிலாக இன்றைய போட்டிக்கு தனக்கு வாய்ப்பு கொடுத்தது மிகச் சரியான தீர்மானம் என்பதை பின் அலன் நிரூபித்தார்.
தொடர்ந்து டெவன் கொன்வேயும் கேன் வில்லியம்சனும் 2ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து க்லென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 16 ஓவர்களில் 152 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் டெவன் கொன்வேயும் ஜெம்ஸ் நீஷாமும் 24 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.
கடைசிவரை துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைக் குவித்தார். ஜேம்ஸ் நீஷாம் 13 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமிலிருந்தார்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: டெவன் கொன்வே.